

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்கள், நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், அந்த நிதி நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றிவிட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா- பைரோஜ்பானு தம்பதியர் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், நிதி நிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர். கணேஷின் மனைவி அகிலா(33), நிதி நிறுவன பொது மேலாளர் காந்த்(56) உட்பட 5 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள எம்.ஆர்.கணேஷ் சகோதரர்கள், ஊழியர்கள், ஏஜென்ட்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த தங்களை, அந்நிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் ஏமாற்றிவிட்டதாகவும், அந்தப் பணத்தை மீட்டுத் தரும்படியும், கும்பகோணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், பரணிதரன், சிவக்குமார், பிரபு, வெங்கட்ராமன், லட்சுமி, பார்வதி, சுவாமிநாதன், ராமகிருஷ்ணன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து, புகார் அளித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெங்கட்ராமன் கூறியதாவது:
நாங்கள் புரோகிதர் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு நன்கு அறிமுகமான வெங்கடேசன் என்பவர், எம்.ஆர்.கணேஷின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெற்றுத் தருவதாக கூறியதை அடுத்து, நாங்கள் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தோம்.
கும்பகோணம் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு பணத்தை திரும்பத் தராமல், எங்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டனர். எனவே, எம்.ஆர்.கணேஷ் சகோதரர்களை கைது செய்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்து, எங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.