பயிற்சி உதவி ஆட்சியராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்

சின்னி ஜெயந்துடன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
சின்னி ஜெயந்துடன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
Updated on
1 min read

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழ் திரை உலக நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சின்னி ஜெயந்த். கடந்த 1980 மற்றும் 1990-களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (26). இவர் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வை (சிவில் சர்வீஸ் தேர்வு) எழுதினார்.

நாடு முழுவதும் 829 பணிகளுக்கு நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் 75-வது ரேங்க் பெற்று வெற்றிபெற்றார். ஐஏஎஸ் பணியை தேர்வு செய்த அவருக்கு, சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே பணி ஒதுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வருகிறார். கள ஆய்வுகள் மேற்கொள்வதோடு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

நடிகர் சின்னி ஜெயந்த் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஸ்ருதன் ஜெய் நாராயணன் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் பயிற்சி பெற்று வருகிறார். களப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அதிக கவனம் செலுத்துகிறார்” என்றனர்.

பயிற்சியில்தான் உள்ளார்

``அதேநேரத்தில், அவர் சார் ஆட்சியராக (சப்-கலெக்டர்) தூத்துக்குடி மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது. அவர் பயிற்சி உதவி ஆட்சியராக மாவட்ட பயிற்சியை பெற்று வருகிறார். இந்த பயிற்சியை அவர் ஓராண்டு நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகே சார் ஆட்சியராக நியமிக்கப்படுவார்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in