Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM

கரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்- மாலை 5 மணிக்கு மேல் கடையை மூடாத வியாபாரிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை

கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. மாலை 5 மணிக்கு மேல் கடைகளை மூடாத வியாபாரிகளுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

கோவையில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடர் வீதி உள்ளிட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு விற்பனை காரணமாக வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரும்பாலான கடைகள் மாலை 5 மணிக்குப் பிறகும் தொடர்ந்து இயங்கின. பலர் தனிநபர் இடைவெளி இல்லாமலும், முகக் கவசம் அணியாமலும் பொருட்களை வாங்க கடைகளில் திரண்டனர்.

மாலை 5 மணிக்கு பிறகு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கடைகளை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்ததுடன், மாவட்ட நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகளை வணிகர்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

வணிகர்கள் கோரிக்கை

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை கிளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், "பால், காய்கறி போன்று மளிகைக் கடைகளில் விற்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவையும் அத்தியாவசியப் பொருட்களே.

எனவே, மளிகைக் கடைகளுக்கு விதிவிலக்கு வழங்கி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் ஹோட்டல்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து உணவு அருந்தவும், அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பேக்கரிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x