

சிம் கார்டு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல பேசி, பெண் மருத்துவரின் செல்போனை ஹேக் செய்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தனர்.
சென்னை அண்ணா நகரைச்சேர்ந்தவர் சாந்தினி பிரபாகர். மருத்துவர். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், வாடிக்கையாளர் குறித்த முழு விவரங்களைத் தருமாறும், தகவல்களை தரத் தவறினால், சிம் கார்டு செயலிழந்து விடும் எனவும் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை வாடிக்கையாளர் சேவை மையம் என்று நம்பி, மருத்துவரும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, க்யூபே என்ற செயலிக்கான லிங்க்-ஐ மருத்துவரின் செல்போனுக்கு அனுப்பி வைத்த மர்ம நபர்கள். அதன் மூலம் ரூ.10 பணப்பரிமாற்றம் செய்யுமாறு கூறிஉள்ளனர்.
இதையடுத்து, ரூ.10 தொகையை ஆன்லைன் பேமென்ட்மூலம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம், 90 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம்என மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அடுத்தடுத்து எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னரும் அவரது செல்போனை அவரால்பயன்படுத்த முடியவில்லை.
தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டதை அறிந்து, லேண்ட் லைன் மூலமாக தனது வங்கிக் கணக்கு உள்ள எஸ்பிஐ வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
க்யூபே என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வங்கிக் கணக்கு மூலமாக பணம் செலுத்தும்போது, தனது செல்போனை ஹேக் செய்து முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட மர்ம நபர்கள், ஓடிபி எண்ணையோ, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் தொடர்பான எந்த தகவலையும் தெரிவிக்காமலேயே பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அந்தமருத்துவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அண்ணா நகர் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.