

வேளாண்மை துறை, தோட்டக் கலைத் துறையின் மரங்கள் கணக் கெடுப்பில் தமிழகத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் வேப்ப மரங்கள் இருப் பதாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், கோயில், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் வேப்ப மரங்கள் உள்ளன. வெப்ப மண்டல பிரதேசமான மதுரையில் அதிக அளவில் உள்ளன.
மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம், வெயில் அதிகமானால் துளிர்விட்டு வளர்ந்து மனிதனுக்கு நிழல் மற்றும் குளிர்ச்சியை தரக் கூடிய ஒரே மரமாகும். நாட்டு மருந்து, இயற்கை மருத்துவத்தில் வேப்பமரத்தின் பலன்கள் எண் ணற்றவை. இவ்வளவு நன்மை தரக்கூடிய இந்த மரங்களில் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் ‘தேயிலை கொசு’ என்ற ஒரு வகை புல்லுருவி ஒட்டுண்ணி வேகமாக பரவி கருகி வருகின்றன.
இதனால் மதுரை மீனாட்சியம் மன் கோயில், மதுரை வேளாண்மை கல்லூரி, தேசிய நெடுஞ்சாலைகள் வேப்ப மரங்கள் கருகியுள்ளன. வேலூர், பாளையங்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வேப்பமரங்கள் கருகி வருகின்றன.
இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக வேப்ப மரத்தை தேயிலை கொசுக்கள் தாக்கி வருகின்றன. இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக இந்த கொசுக்களின் தாக்கம் அதிகமாகி யுள்ளது. சாதாரணமாக தேயிலை டீ எஸ்டேட்களில்தான் இவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கொசுக்களுக்கு கொய்யா, முருங்கை, வேப்பமரம் உள்ளிட்ட பல செடிகளை தாக்கக்கூடிய தன்மையும் இருக்கிறது.
வேப்பமரத்தில் இந்த தேயிலை கொசு தன்னுடைய கூர்மையான முனை மாதிரியான அமைப்பை குத்தி வேப்பஞ் சாறை உறிஞ்சி நச்சுப் பொருளை மரத்தின் உள்ளே செலுத்திவிடும். உடனே மரத்தின் தண்டுகள், இலைகள் காய்ந்து வளர்ச்சி தடைபடும். பாலிதீன் பைகளில் நட்டு வளர்க்கப்படும் சிறிய கன்றுகள், சிறிய மரங்கள் இறக்கும். இதில் பெரிய வேப்ப மரங்கள் இறக்க வாய்ப் பில்லை.
டிசம்பர் முதல் மார்ச் வரை
இந்த தேயிலை கொசு பூச்சிகளின் பெருக்கம் டிசம்பர் முதல் மார்ச் வரை இருக்கும். இந்த கொசு தாக்கிய வேப்ப மரங்கள் ஏப்ரலில் மீண்டும் புதிதாக துளிர்விட்டு வளர்ந்துவிடும். மரத்துக்கு மருந்து அடித்தால் இந்த கொசுக்களை உடனே சாகடிக்கலாம். மறுபக்கம் அந்த மருந்தால் இயற்கை மாசுபட்டுவிடும்.
அதிகமாக பூச்சி மருந்து அடித் தால், இந்த கொசுக்களை இயற் கையாகவே அழிக்கும் இயற்கை எதிரிகள், நன்மை செய்யும் ஒட்டுண் ணிகள் இறந்துவிடும். இந்த இயற்கை எதிரிகள், ஒட்டுண்ணிகள் இறந்துவிட்டால் நிரந்தரமாக பெரிய பிரச்சினைகள் மரங்களுக்கு ஏற் படும்.
அதனால், சிறிய மரக்கன்றுகள், நாற்றங்கால்களில் மட்டுமே தற் போது விவசாயிகளுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறோம். காடுகளைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சமநிலையை அழிப்பது, பூமி வெப்பமயமாதல் போன்றவைகள் இதுபோன்ற புதுப்புது நோய்களும், பூச்சிகளும் உருவாக முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்றார்.
வேப்ப மரத்தின் மதிப்பு ரூ.25 லட்சம்
கல்யாணசுந்தரம் மேலும் கூறியதாவது: 25 ஆண்டுகளுக்கு உயிர் வாழும் ஒரு வேப்பமரத்தால் கிடைக்கும் நன்மைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். மாசு, தூசியை கட்டுப்படுத்தும் சக்தி அதிகம் இருக்கும் மரம் வேப்பமரம். இந்த மரங்கள் இல்லையென்றால் சாலைகளில் வாகனங்கள் எழுப்பும் ஒலி காதுகளை செவிடாக்கிவிடும். அதனால், சாலைகளில் இந்த மரங்கள் விரும்பி அதிகளவு நடப்படுகின்றன என்றார்.