

தாம்பரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத்(25). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்னேகா(19). இவர்களுக்குத் திருமணமாகி 8 மாதங்களாகின்றன. இந்நிலையில், வரதட்சணை கேட்டு மனைவி ஸ்னேகாவை கணவர் பிரமோத் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவருடன் கோபித்துக் கொண்டு, சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஸ்னேகா வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரமோத் தொலைபேசி மூலம் ஸ்னேகாவைத் தொடர்பு கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டராம். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்னேகா, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சேலையூர் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வரதட்சணைக் கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்னேகாவின் தந்தை ரவி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, பிரமோத்திடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.