Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

ரூ.20 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மஞ்சள் நீர்க் கால்வாய் சீரமைப்பு பணி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர் கால்வாயில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனை சீரமைக்க ரூ.20 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் வழியாக ஓடும் மழைநீர் கால்வாய் மஞ்சள் நீர்க் கால்வாய். இந்த கால்வாய் தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் நகராட்சியில் கைலாசநாதர் கோயில் பகுதி, கிருஷ்ணன் தெரு,காமராஜர் வீதி, ரயில்வே சாலை மற்றும் திருக்காலிமேடு பகுதி வழியாகச் சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இந்தக் கால்வாய் 20 அடி ஆழமும், 30 அடி அகலமும் கொண்டது. சுமார் 20 கி.மீ. தூரம் ஓடும் இந்தக் கால்வாயில் சாயப்பட்டறை கழிவுகள், அரிசி ஆலைக் கழிவுகள், பொதுமக்கள் சிலரின் வீட்டில் இருந்து செல்லும் கழிவுகள் விடப்படுகின்றன.

இதனால் இந்த மஞ்சள் நீர்க் கால்வாய் தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது.

பல்வேறு இடங்களில் பாலித்தீன் பைகள், குப்பை கொட்டப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நகரம் முழுவதும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கால்வாய் காஞ்சிபுரம் நகரில் மட்டும் சுமார் 8 கி.மீ. தூரத்துக்குச் செல்கிறது. நகரப் பகுதியில் செல்லும் கால்வாயில் புல் மற்றும் குப்பையால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் தேங்காதவாறு அவ்வப்போது அடைப்புகள் மட்டும் சரி செய்யப்படுகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் கடந்த 2018-ம்ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் உள்ள குப்பையை அகற்றிவிட்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் கால்வாய்க்குள் கான்கிரீட் போடும் வகையில் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்த திட்ட அறிக்கையின்படி வெயில் காலங்களில் குறைந்த அளவு நீர் ஓடுவதற்கும், மழைக்காலங்களில் அதிக நீர் ஓடுவதற்கும் ஏற்ற வகையில் கீழ் பகுதியில் குறுகி, மேல் பகுதியில் விரிவாக இருக்கும்படி கால்வாய் அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்த கால்வாய் பொதுப்பணித் துறை கால்வாயாக இருந்தாலும் காஞ்சிபுரம் நகரப் பகுதி வழியாக ஓடுவதால் திட்ட அறிக்கையை நகராட்சி மூலம் அரசுக்கு அனுப்பி இருந்தனர். நிதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் நகராட்சி அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.

ஆனால் அந்த கால்வாய் சீரமைக்கப்படாமல் இதுவரை அப்படியே உள்ளது. விரைவில் இந்த கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x