

ஆடிக் கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் நேற்றுசிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், கோயிலுக்கு வெளியே நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் ஆடிக் கிருத்திகை முக்கியமானது. தமிழகத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த நாளில் பக்தர்கள் காவடி எடுப்பது, அலகு குத்துவது உள்ளிட்டநேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவது வழக்கம்.
தற்போது, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோயில்களில் வரும் 9-ம் தேதி காலை வரை தரிசனத்துக்கும் நதிக் கரைகளில் புனித நீராடலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட முக்கிய முருகன் கோயில்களில் நேற்று முன்தினம் முதல்இன்று வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆடிக் கிருத்திகை நாளான நேற்று முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
வடபழனி கோயிலில் முருகனுக்கு நேற்று காலை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அபிஷேகம் செய்யப்பட்டு முருகனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதைஅறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.இருப்பினும், கோயிலுக்கு வெளியே நின்று நெய் விளக்கு ஏற்றியும் தேங்காய் உடைத்தும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
கந்தகோட்டம் முருகன் கோயிலில் உற்சவர் முத்துகுமாரசாமிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. நேற்று மாலை சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதேபோல், சென்னை முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தரிசனத்துக்கு தடை விதிக்காத சிறிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.