

‘எழுத்து’ மிகப்பெரிய ஆயுதம். சமூக மாற்றத்துக்கும், சம நீதிக்கும் அடித்தளமிடும் எழுத்தை முழுநேர இயக்கமாக கொண்டு சுற்றி சுழல்பவர்கள் அதிகம். அதேநேரத்தில் விளிம்பு நிலையில், தன்னுடைய அன்றாட பணிகளுக்கு மத்தியில் எழுத்தையும் விடாமல் இறுக பிடித்துக் கொண்டு, அதில் தடம் பதிப்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் தான் நாகர்கோவில் கோபால கிருஷ்ணன். சமீபத்தில் இவர் எழுதிய நான்காவது புத்தகமான ‘ஆடி மாதமும், வயலின் இசையும்’ எனும் சிறுகதை தொகுப்பு வெளியானது.
நாகர்கோவில் குஞ்சன் விளையை சேர்ந்த கோபாலகி ருஷ்ணன்(39) தொழில் ரீதியாய் எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பணிகளை செய்து வருகிறார். இவற்றுக்கு மத்தியில் புத்தகங் களை எழுதி வெளியிடுவது, குறும்படங்களை இயக்குவது என தன்னை ஈடுபடுத்திக் கொள் கிறார். இவரது குறும்படங்கள் விருதுகளும் பெற்றுள்ளன.
கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘எனக்கு சொந்த ஊரு குஞ்சன்விளை. நான் பிறந்ததும் ஜாதகம் பார்த்தப்ப அம்மா, அப்பாவோட சேர்ந்து இருக்கக் கூடாதுன்னு இருந்துச்சாம். அதனால அப்பவே என்னை மேலகிருஷ்ணன்புதூரில் உள்ள எங்க மாமா வீட்ல கொண்டு விட்டாங்க. பெத்தவங்க பாசமே இல்லாமத்தான் 12 வயசு வரைக்கும் வளர்ந்தேன். 10-ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய தனிமை சூழலையும், அனுபவங்களையும் மையப்படுத்தி புதுக்கவிதை எழுதினேன். நாளிதழ்கள் மீதும் வாசிப்பின் மீதும் கவனத்தை திருப்பினேன்.
பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு, ஐடிஐ வயரிங் படித்து விட்டு, இப்போது வயரிங் வேலை பார்த்துட்டு இருக்கேன். ஆனாலும் திரைத்துறையின் மீதும், எழுத்தின் மீதுமே ஆர்வம் அதிகம். இலங்கைத் தமிழர் விவகாரம், மணல் கொள்ளை, கூடங்குளம் விவகாரம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த விவகாரங்களில் இதுவரை 5 குறும்படங்கள் இயக்கியுள்ளேன்.
நான் இயக்கிய ‘சொல் இலை’ எனும் குறும்படம் தமிழக அளவில் த.மு.எ.க.ச. நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. தினமும் காலை 9 மணிக்கு வயரிங் வேலைக்கு போனால், மாலை 6 மணிக்கு தான் வீட்டுக்கு வர முடியும்.
வீடுகளில் வயரிங் செய்து கொண்டிருக்கும் போதே சில நேரங்களில் சின்ன கதை களுக்கான கரு கிடைக்கும். அப்போ தெல்லாம் வீட்டு சுவர் களில் சிறிதாக பென்சில் வைத்து குறித்துக் கொள்வேன். மாலையில் பணி முடிந்து போகும்போது அழித்து விடுவேன். இதுவரை 4 புத்தகங்கள் எழுதியுள்ளேன். மனைவியின் நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டுகிட்டு இருக்கேன். என் எழுத்து மேல நம்பிக்கையோட ஒத்துழைக்குற என் மனைவி தொடங்கி, இங்கே நான் நன்றி சொல்ல வேண்டிய மனிதர்கள் அதிகம்’ என்றார் அவர்.