

எல்ஐசியிலிருந்து பேசுவதாகக் கூறி லால்குடி அதிமுக பிரமுகரிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த டெல்லி இளைஞரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான அப்துல்கனி பாட்சா(எ)பர்வீன் கனியிடம் கடந்த 2017-ம் ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு எல்ஐசி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். அப்போது, பர்வீன் கனியின் எல்ஐசி பாலிசி முதிர்வடைந்து விட்டதாகவும், அதை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறி, அதற்காக பல தவணைகளாக ரூ.86.36 லட்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக பர்வீன் கனி அளித்த புகாரின்பேரில் கடந்த 2017-ல் ரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிபிசிஐடியில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையையும் துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென தற்போதைய சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த வழக்கு விசாரணை மத்திய மண்டல சிபிசிஐடி எஸ்.பி தில்லை நடராஜன் மேற்பார்வையில் பெரம்பலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் நிர்மலா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், தலைமைக் காவலர் சந்திரசேகரன், ஆனந்தபாபு, ஸ்ரீதர் ஆகியோரைக் கொண்ட குழுவுக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது டெல்லியைச் சேர்ந்த கும்பல் எனத் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களாக டெல்லி சென்று முகாமிட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய கிழக்கு டெல்லியைச் சேர்ந்த அபய்சிங் மகன் அபினேஷ்குமார் சிங் (எ)அமன் (26) என்பவரை கடந்த 29-ம் தேதி கைது செய்தனர். அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் திருச்சிக்கு அழைத்து வந்து, நேற்று முன்தினம் திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவரை முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, ‘‘அபினேஷ்குமார் தவிர இவ்வழக்கில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தவும், மோசடி செய்த பணத்தை மீட்பதற்காகவும் அபினேஷ்குமார் சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான அனுமதி கேட்டு விரைவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம்’’ என்றனர்.
இதற்கிடையே, இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு டெல்லி சென்று குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி போலீஸாரை, சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார், டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.