Published : 02 Aug 2021 09:52 PM
Last Updated : 02 Aug 2021 09:52 PM

அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பாஜக வணிக பிரிவு மாநில துணைத் தலைவர் தணிகைவேல் நீக்கம்

திருவண்ணாமலை 

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் பாஜக வணிக பிரிவு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இன்று (2-ம் தேதி) அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தணிகைவேல். இவர், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள முருகனின் ஆதரவுடன், அக்கட்சியில் கடந்தாண்டு இணைந்தார். அவருக்கு வணிகப் பிரிவின் மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

மேலும் முருகனுடனான நெருக்கம் காரணமாக, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்த பொதுப் பணித் துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்டு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார்.

தேர்தல் பணியில் மெத்தனமாக செயல்பட்டது, பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாமல் அதிகாரமிக்கவராக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது, கட்சி தலைமைக்கு தவறான தகவல்களைக் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மீது, அக்கட்சியினர் முன் வைத்தனர்.

முன்னதாக, திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை ரமணா நகர் 3-வது வீதியில் வசிக்கும் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஆனந்தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், இவரது பெயரும் தொடர்புப்படுத்தி பேசப்பட்டது. இது தொடர்பாக மாநில பொறுப்பாளர் மற்றும் தேசிய தலைமைக்கு அடுக்கடுக்காக, உள்ளூர் பாஜகவினர் மூலமாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுற்றுபயணம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தணிகைவேலை நெருங்கவிடவில்லை. இதனால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் வணிகர் பிரிவின் மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எஸ்.தணிகைவேல் நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இன்று(2-ம் தேதி) அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி சார்ந்த தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x