

மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் கூடியதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் இன்று மூடப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணியில் தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய பூ மார்க்கெட்டாக செயல்படுகிறது. இங்கு மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் இருந்த விவசாயிகள், வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு இங்கிருந்து மதுரை மல்லிகைப்பூ ஏற்றுமதியாகிறது. கரோனா முதல், இரண்டாவது அலையால் இந்த பூ மார்க்கெட் மூடப்பட்டது.
பூ வியாபாரம் நடக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 மாதத்திற்கு முன்தான் கரோனா இரண்டாவது அலை முடிந்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தற்போது தமிழகம் முழுவதுமே கரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த அதிகரிப்பு மூன்றாவது அலையாக இருக்குமோ? என்ற அச்சத்தை சுகாதாரத்துறை மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுவெளியில் மக்கள் அதிகளவு கூடாமல் தடுக்கவும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வைக்கவும், மீறும் இடங்களுக்கு சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நிர்வாகம், கடந்த 2 நாளாக கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இன்று ஆடிப் பெருக்கு, ஆடி அம்மாவாசையை முன்னிட்டு பூ வியாபாரம் களைகட்டியது. சமூக இடைவெளி இல்லாமல் மக்கள், விவசாயிகள், குவிந்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், நேற்று மாலையுடன் பூ மார்க்கெட்டை மூட உத்தரவிட்டார். மேலும், பூ வியாபாரத்தை நகர் முழுவதும் ஆங்காங்கே பரவலாக்கும்வகையில் ஆங்காங்கே சில்லறைக் கடைகள் அமைக்கவும், மொத்த பூ வியாபாரத்தை மட்டும் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக செயல்படுவதற்கு ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார்.