

கோவையில் செம்மண் எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், கடந்த ஓராண்டில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கனிமவளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றிச் செயல்படும் செங்கல் சூளைகளின் இயக்கத்தைத் தடை செய்து கடந்த மார்ச் மாதம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
பின்னர், உரிமம் பெறாத 186 சூளைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை மின்வாரியம் துண்டித்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் முறையான ஆணை இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சூளைகள் செயல்படுவது குற்றமாகும்.
அரசின் அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மண் எடுத்துப் பயன்படுத்தினால் வருவாய்த்துறை, காவல்துறை, புவியியல் மற்றும் கனிமவளத்துறை மூலம் வாகன ஓட்டுநர், உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமம் பெறாத சூளைகளில் இருந்து சுட்ட செங்கற்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதும், அனுமதியின்றி சூளைக்கு மண் எடுத்துச் செல்வதும் குற்றமாகும்" என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் 11 வீரபாண்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காளையனூர் பழனிகுட்டை பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு செம்மண் எடுக்கப்பட்டு, டிப்பர் லாரி மூலம் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நேற்று (ஆக.1) அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அதில், ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்து செம்மண் எடுக்கப்பட்டு வருவதும், ஜேசிபி இயந்திரங்களை இயக்கியது கோவை பன்னிமடையைச் சேர்ந்த லட்சுமணன், தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த வெங்கடேஷ், டிப்பர் லாரியை ஓட்டியது வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் என்பதும் தெரியவந்தது.
முதலில் விவசாயத்துக்கு நிலத்தைச் சரிசெய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் மூன்று வாகனங்களையும் சிறைப்பிடித்த அதிகாரிகள் தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தடாகம் காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். விசாரணையில், ராமச்சந்திரன் தனது சொந்தத் தேவைக்காக செம்மண் எடுத்தது தெரியவந்தது. அதனால், நில உரிமையாளரான ராமச்சந்திரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கனிமவளத்துறையினர் கூறும்போது, “கோவையில் மலையிடப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ்வரும் பகுதிகள், இதர பகுதிகள் என எந்த இடத்திலும் செம்மண் எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கனிமவளத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து கடந்த ஓராண்டில் சட்டவிரோதமாக மண் எடுத்துச்சென்ற 41 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றனர்.