Published : 02 Aug 2021 06:10 PM
Last Updated : 02 Aug 2021 06:10 PM

88 நாட்களுக்குப் பிறகு ரிவால்டோ யானை மரக் கூண்டிலிருந்து விடுவிப்பு: வனத்தில் விடப்பட்டது

மசினகுடி

வாழைத் தோட்டத்தில் கடந்த 88 நாட்களாக மரக் கூண்டிலிருந்த ரிவால்டோ யானை வனத்தில் விடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயதுடைய ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் பார்வைக் குறைபாடு காரணமாக வனப் பகுதிக்குள் செல்லாமல், குடியிருப்புப் பகுதிகளிலேயே நடமாடிய ரிவால்டோ யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது.

கடந்த மே மாதம் 5-ம் தேதி இந்த யானையைப் பிடித்த வனத்துறையினர், அதை கரால் என்னும் மரக்கூண்டில் அடைத்து, 80 நாட்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும், வனப் பகுதியில் விடுவதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்று பராமரிப்பதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய தமிழக வன கால்நடைத் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்லைக்கழகப் பேராசிரியர் தர்மசீலன், எஸ்பிசிஏ உறுப்பினர் ரமா, உலகளாவிய வனவிலங்குகள் நிதியம் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், மோகன்ராஜ், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாசன், உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் கடந்த மாதம் 10-ம் தேதி வாழைத் தோட்டத்தில் கராலில் உள்ள ரிவால்டோ யானையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் ரேடியோ காலர் பொருத்தினர். இன்று ரிவால்டோ யானை மரக் கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, வனத்தில் விடப்பட்டது.

அதிகாலை 3 பணிக்குத் தொடங்கிய இந்த ஆப்ரேஷனை வனத்துறைச் செயலாளர் சுப்ரியா ஷாஹூ, முதன்மை வனப் பாதுகாவலர் சேகர் நீரஜ் கண்காணித்தனர். பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்ட ரிவால்டோ, சிக்கல்லாஹ வனப்பகுதியில் விடப்பட்டது.

கூண்டிலிருந்து வெளியேறி வனத்தை அடைந்த ரிவால்டோ மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டது. வனத்தில் கால் பதித்ததும், ரிவால்டோ தரையிலிருந்த மண்ணை வாரித் தன் மீது போட்டு, மண் குளியலை ஆனந்தமாக அனுபவித்தது. சுதந்திர காற்றை சுவாத்ததும், வனத்துக்கு தும்பிக்கையைத் தூக்கி வணக்கம் செலுத்தியது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும் போது, ”ரிவால்டோ யானை வாழைத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கராலில் இருந்து வாகனத்தில் ஏற்றப்பட்டு, சிக்கல்லாஹ வேட்டை தடுப்பு முகாம் அருகே விடப்பட்டது. இப்பகுதி அருகே மனித வசிப்பிடங்கள் இல்லை. மேலும், இப்பகுதியில் உணவு மற்றும் நீருக்குப் பிரச்சினை இல்லை. ரிவால்டோ ஆரோக்கியமாக உள்ளது.

யானைக்கு ரேடியோ காலர் அணிவிக்கப்பட்டுள்ளதால், அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். யானை குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் வன ஊழியர்கள் கண்காணிப்பார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x