சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப் படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்

கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated on
2 min read

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு திருவுருவப் படத்தைத் தமிழக சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று (ஆக. 02) கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தைச் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க இன்று மதியம் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், சில புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.

பின்னர், கார் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர் மாளிகை புறப்பட்டார். அவரது வருகையையொட்டி, சாலையின் இரு புறங்களிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆளுநர் மாளிகையில் மதிய உணவருந்திய குடியரசுத் தலைவர், மாலை 4.40 மணியளவில் புறப்பட்டு, 5.00 மணியளவில் சட்டப்பேரவையை வந்தடைந்தார்.

முன்னதாக, விழா மேடையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேலும், இவ்விழாவில், அமைச்சர்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, அரசு கொறடா, கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

விழா மேடைக்கு குடியரசுத் தலைவர் வந்தவுடன் தேசிய கீதமும், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. பின்னர், சபாநாயகர் அப்பாவு, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார். அப்போது, தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக தமிழக சட்டப்பேரவை திகழ்வதாகக் கூறிய சபாநாயகர், கோட்டையில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தது, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்து பேசினார். கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறப்பது மிகப் பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்பின், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை, புத்தகம், நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கினார். அதேபோன்று, முதல்வருக்கு சபாநாயகர் பொன்னாடை, புத்தகம், நினைவுப் பரிசை வழங்கினார்.

இதையடுத்து, கருணாநிதியின் முழு உருவப் படத்தைக் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார். அதில், யானை சிலை மீது கருணாநிதி கை வைத்திருப்பது போன்ற உருவப் படம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னால், திருவள்ளுவர் சிலையும் இடம்பெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் உருவப்படம் திறக்கப்படும் 16-வது தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in