Published : 02 Aug 2021 04:43 PM
Last Updated : 02 Aug 2021 04:43 PM

விவாதங்கள் இல்லாமல் அரசு பொது இன்சூரன்ஸ் தனியார்மய சட்டத்திருத்தம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

புதுடெல்லி 

தேசியமயம் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எனில் அதை சிதைக்கிற இந்த சட்டத் திருத்தம் வரலாற்றின் கறையாக இருக்கும் என அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தத்தை விமர்சித்துள்ளார் மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் உளவுப் பிரச்சினையில் மத்திய அரசின் பிடிவாதப் போக்கு தொடர்கிற அதே வேளையில், மோசமான பொருளாதார முடிவுகளையும் திணிப்பதும் அரங்கேறுகிறது. இப்படியே இன்று அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்குகிற சட்ட திருத்தமும் விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தனியார்மய பலி பீடம்

இந்தியப் பொருளாதார வரலாற்றை பின்னோக்கி சுழற்றுகிற இன்னொரு முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 1971ல் 107 தனியார் நிறுவனங்களை தேசியமயம் ஆக்கி உருவாக்கப்பட்ட அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்று மீண்டும் தனியார் மய பலி பீடத்திற்கு இழுத்து வரப்படுகிறது. ஏன்? எதற்காக?

விடையில்லா கேள்விகள்

விவாதம் இல்லாமல் தனியார் மயத்திற்கு வழி திறந்துள்ள மத்திய அரசு பல கேள்விகளுக்கு திரை போட்டிருக்கிறது. 2015 ல் இவர்கள் அரசுதான் இதே பொது இன்சூரன்ஸ் தேசியமய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அப்போது எந்த நேரத்திலும் இந்த நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும், ஜி.ஐ.சி ரீ (General Insurance Corporation GIC Re) என்கிற மறு காப்பீடு நிறுவனத்திலும் 51 % பங்குகள் அரசின் கைவசம் இருக்குமென்றுதானே சட்டத்தை திருத்தினார்கள்.

ஆறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆறக் கூட பொறுக்காமல் அவ்வளவு சூடாக தனியார்க்கு முழுமையாகவே இந்த நிறுவனங்களைப் பரிமாறத் துடிப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் இந்த அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கும் போதே தங்களின் ஈடேறாத ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற நினைக்கும் கார்ப்பரேட் நண்பர்களுக்கு இவர்கள் படைக்கிற விருந்து என்பதைத் தவிர வேறென்ன?

இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு (Insurance Penetration) தனியார் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறது என்று இந்த சட்ட வரைவை முன் மொழியும் போது நிதியமைச்சர் சொன்னார். இன்சூரன்ஸ் பரவலாக்கல் என்பதற்கு இந்த அரசு வைக்கக் கூடிய அளவு கோல் என்ன? எவ்வளவு தொகை கிடைக்கிறது என்பதா? எவ்வளவு மக்களை, சாமானியர்களை, சிற்றூர்களை, கிராமங்களை இந்த நிறுவனங்கள் எல்லாம் தொட்டுள்ளன என்பதா?

நான் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் 2020 அறிக்கையில் இருக்கிற விவரங்களை கூறுகிறேன். தனியார்கள் இந்த துறைக்குள் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிறகும் அவர்கள் திறந்திருக்கிற மொத்த அலுவலகங்கள் 2655 ல் 2609 முதல் மற்றும் இரண்டாவது தட்டு நகரங்களில் (Tier 1 and Tier 2 cities) தான் உள்ளன. மூன்றாம், நான்காம், ஐந்தாம் தட்டு நகரங்களில் இருப்பது வெறும் 46 அலுவலகங்கள். ஆறாம் தட்டு ஊர்கள் - அதாவது 5000 க்கும் கீழே மக்கள் வாழும் இடங்களில் - ஒரு அலுவலகம் கூட கிடையாது.

நிதியமைச்சர் இடம் கேட்கிறேன்... இதுதான் இன்சூரன்ஸ் பரவலா? ஆனால் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மொத்த அலுவலகங்கள் 7546 ல் 2389 அலுவலகங்கள் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் தட்டு ஊர்களில் உள்ளன. 46 எங்கே? 2389 எங்கே? உண்மையில் இன்சூரன்ஸ் பரவலை செய்யும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாராட்ட வேண்டாமா? வளர்க்க வேண்டாமா? அரசுதான் அந்த நிறுவனங்களுக்கு உடமையாளர். இந்த நிறுவனங்களின் செயல்பாடு பற்றி பெருமைப்பட வேண்டாமா? உடமையாளரே சொந்த நிறுவனத்தை விட்டுக் கொடுக்கலாமா?

தனியார் மேல் இவ்வளவு பாசம் ஏன்

தனியார்கள் எனில் லாப நோக்கு, அரசு நிறுவனங்கள் என்றால் சமூக நோக்கு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்லவா! எங்கள் தமிழ்நாடு முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டம் கூட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால்தான் நிர்வகிக்கப்படுகிறது. பிரதமர் ஜீவன் சுரக்சா பீமா யோஜனா - ரூ 12 பிரிமியத்தில் ரூ 2 லட்சம் விபத்து காப்பீடு தருகிற வங்கிக் கணக்கு உடன் இணைக்கப்பட்ட திட்டம் - யாரால் அதிகம் நிர்வகிக்கப்படுகிறது.

17 கோடி பேரில் கிட்டத்தட்ட 16 கோடி பேருக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு தருவது அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே. 204 கோடி ரூபாய் பிரீமியம், ஆனால் வழங்கப்பட்டுள்ள உரிமம் 723 கோடி ரூபாய்கள். எப்படி வருவார்கள் தனியார்கள்! லாபம் இல்லையெனில், லாபம் குறைவெனில் தனியார்கள் எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்பதற்கு உங்கள் கைமேல் உள்ள உதாரணம் இல்லையா இது?

நீங்கள் பட்ஜெட்டில் ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்தீர்கள்... ஆனால் இப்போதோ எந்த நிறுவனத்தையும் எதிர் காலத்திலும் தனியார் மயமாக்க ஒட்டு மொத்த திருத்தத்தை ஒரே அடியில் முன்மொழிந்திருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய முடிவை இப்படி சாதாரணமாக முன் வைப்பது ஏன்? தனியார்கள் மீது ஏன் இவ்வளவு பாசம்?

இட ஒதுக்கீடு என்ன ஆகும்?

பங்கு விற்பனையையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் இது பங்கு விற்பனையையும் கடந்த முடிவு. தனியார் மயம். "அரசு" என்கிற அடையாளத்தையே அந்த நிறுவனங்கள் இழந்து விடும். அங்கே சமூக நீதி இருக்குமா? ஓ.பி.சி , எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு இருக்குமா? தமிழ்நாடு சமூக நீதியை தாலாட்டி சீராட்டி வளர்த்த மண். தமிழ்நாட்டின் சார்பில் இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கேட்கிறேன். இந்த சட்டத் திருத்தம் சமூக நீதியைக் கொன்றுவிடாதா? இட ஒதுக்கீட்டை பலியாக்காதா?

மக்களுக்கும், பொதுக் காப்பீடு துறைக்கும் உண்மையில் நன்மை செய்ய நினைத்தால் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணையுங்கள். பலப்படுத்துங்கள். உங்கள் அரசே 2018 ல் மூன்று அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கப் போவதாக இதே மன்றத்தில் அறிவித்தீர்கள். உங்கள் வார்த்தைகளை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இதுவே மாற்று. மக்களுக்கு நன்மை செய்யும் மனம் வேண்டும். அதை நிறைவேற்றுகின்ற அரசியல் உறுதி வேண்டும்.

இந்த சட்ட திருத்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தேசியமயம் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எனில் அதை சிதைக்கிற இந்த சட்டத் திருத்தம் வரலாற்றின் கறையாக இருக்கும்.

இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x