

கரூர் மாவட்டப் பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க, கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியராக த.பிரபுசங்கர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி பொறுப்பேற்றார். ஆட்சியர் பிரபுசங்கர் மருத்துவர் என்பதால், பொறுப்பேற்ற அன்றே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் சிகிச்சை பெற்றுவந்த கரோனா தொற்றாளர்களை முழு கவச உடை அணிந்து சந்தித்தார். பொறுப்பேற்ற மறுநாளே கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி ஆய்வுக்காக, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றவர், தனது வருகைக்காகப் பொதுமக்களைக் காக்க வைத்திருந்ததால், அதற்காகப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொறுப்பேற்ற 5 நாட்களிலேயே காணொலி மூலம் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கலெக்டர் கரூர் என்ற பெயரில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், ட்விட்டர் கணக்கை இன்று (ஆக. 02) தொடங்கியுள்ளார். அவரது அதிகாரபூர்வமான இக்கணக்கில் தினசரி நிகழ்வுகள், அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ட்விட்டர் கணக்கு தொடங்கியுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.