Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்; மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்:

கரோனா பெருந்தொற்று கடந்த18 மாதங்களாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது. மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக் கட்டமைப்புகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், நம் மருத்துவர்கள், செவிலியர்களின் தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றால் கரோனா2-வது அலையை கட்டுப்படுத்திஉள்ளோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகமாகி வருகிறது. மக்கள்தொகை அதிகமாகவும், நெரிசலாக வாழும் சூழலும் உள்ள நாட்டில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது. அதற்கேற்ப பல நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறோம்.

ஊரடங்கு பிறப்பித்தால் குறையும் வைரஸ் பரவல், தளர்வுகள் அறிவிக்கப்படும்போது பரவத் தொடங்குகிறது. இதை கவனத்தில்வைத்து மக்கள் செயல்பட வேண்டும். கடைகளை திறக்க அனுமதித்தால் அங்கு வரும் மக்கள்,கரோனா காலக் கட்டுபாடுகளைப் பின்பற்றத் தவறுகின்றனர். அதனால்தான் மக்கள் அதிக அளவில் கூட்டம் சேரும் இடங்களைமூடலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமேகடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது. மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்பதை கொஞ்சம் கடுமையாக சொல்லிக் கொள்கிறேன்.

முதல் அலையைவிட மாறுபட்டதாக 2-வது அலை இருந்ததுபோல, அதை விடவும் மாறுபட்டதாக 3-ம்அலை இருக்கலாம். மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. கரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியே சிறந்த ஆயுதம். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள். மிக மிக அவசிய, அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வாருங்கள். வரும்போது 2 முகக் கவசங்கள் பயன்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x