

அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களை, மறுகுடியமர்வு செய்யும் வரை அவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கக் கூடாது என்று பொதுப்பணித் துறையிடம் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த 93குடும்பங்கள், புளியந்தோப்பு பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீடு ஒதுக்கீடு பெறாத பல குடும்பங்கள், தங்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) சார்பில், ஒருங்கிணைந்த கூவம் ஆறு மறுசீரமைப்பு பணியின்கீழ், கூவம் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்து வரும் குடும்பங்கள் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்படுகின்றன.
அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரத்தை 243 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை அகற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்களில் 93 குடும்பங்கள், புளியந்தோப்பு கேபி பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கடந்த ஜூலை 31-ம் தேதிமறுகுடியமர்த்தப்பட்டனர். இந்த 93 குடும்பங்கள் தங்கள் உடைமைகளை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியிலிருந்து கேபி பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு கொண்டு செல்லத் தேவையான வாகன வசதிகளும், 31-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைவருக்கும் 3 வேளை உணவும் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர் களுக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக மறுகுடியமர்த்தப்படுவார்கள்.
ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருக்கும் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.