அமெரிக்காவில் மருத்துவர், ரஷ்யாவில் பொறியாளர் எனக் கூறி கைவரிசை திருமணத்துக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளம் பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: குவியும் புகார்களால் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் அறிவுரை

அமெரிக்காவில் மருத்துவர், ரஷ்யாவில் பொறியாளர் எனக் கூறி கைவரிசை திருமணத்துக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளம் பெண்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: குவியும் புகார்களால் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் அறிவுரை
Updated on
2 min read

திருமண தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்து வைத்திருக்கும் இளம்பெண்களை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற மோசடியால் பாதிக்கப்பட்ட 3 இளம்பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர்.

அவர்களில் ஒருவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். தனியார் நிறுவன மேலாளர். இவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வரனுக்காக பதிவு செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர், தனது பெயர் அலெக்ஸ் கிரேசி. அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாக கூறியுள்ளார். அந்தநபரின் பேச்சு, போன் நம்பர் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியதால், பேசி பழகத் தொடங்கியுள்ளார். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்.

இந்நிலையில், கொரியர் மூலம் விலையுர்ந்த பரிசு பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறி நகை, பணம் இருப்பது போன்ற புகைப்படத்தையும் வாட்ஸ்அப்பில் அலெக்ஸ் அனுப்பியுள்ளார். இதனால் அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி போனில் அழைத்த நபர் ஒருவர், அதிக மதிப்புள்ள பொருட்கள் என்பதால், முன்பணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். அடுத்த நாள், சுங்கத்துறையில் இருந்து பேசுவதாகக் கூறிய நபர் ஒருவர், சட்டவிரோதமாக வந்த கோடிக்கணக்கான ரூபாய் பரிசு பொருட்களுக்கு வரிசெலுத்த வேண்டும் என்றும் தவறினால் சிறை செல்ல நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இதேபோல் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு என அடுத்தடுத்து பேசியுள்ளனர். இவ்வாறு ரூ.17 லட்சம் வரை அந்தப்பெண்ணிடம் பறித்துள்ளனர். கடைசிவரை பரிசு பொருள் வரவே இல்லை.

தான் ஏமாற்றப்பட்டதும் கும்பல்ஒன்று இந்த மோசடியை அரங்கேற்றியதும் அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது. திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றிய மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

ரூ.19 லட்சம் பரிசு

புகார் அளிக்க வந்த மற்றொரு பெண்ணிடமும் (சூளைமேட்டை சேர்ந்தவர்) இதேபாணியில் இங்கிலாந்து டாக்டர் என கூறி ஒருவர் ரூ.19 லட்சம் பறித்துள்ளார்.

இதேபோல் திருமண மையத்தில் பதிவு செய்திருந்த மற்றொரு பெண்ணுக்கு ரஷ்யாவில் பொறியாளராக இருப்பதாக கூறி ஒருவர் பேசியுள்ளார். தான் ஒரு அனாதை எனவும் தனது சொத்துகளை விற்றுவிட்டு சென்னை விமான நிலையம் வந்த போது ஏராளமான நகை, பணம் இருந்ததால் சுங்கத் துறையினர் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தன்னை விடுவிக்க பணம் கேட்டுள்ளார். இதற்காக அந்தப் பெண் அடுத்தடுத்து கணிசமான பணத்தை இழந்தார்.

இதுபோல் பல பெண்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான புகார்களும் வருகின்றன.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் ஜி.நாகஜோதி கூறும்போது, ‘பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு, இரக்கப்பட்டு பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in