

தொழிலாளர் பணி பாதுகாப்புக்கு எதிராக மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இருக்கும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நேற்று கூறியதாவது:
மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 4 தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேலைநிறுத்தம் செய்ததற்காக வழங்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் முழுவதுமாக ரத்து செய்வதோடு, அந்த நாட்களை ஊதியமற்ற விடுப்பாக நிர்வாகம் அறிவிக்க வேண்டும். தொழிற்தகராறு சட்டப்படி முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட 35 சதவீத இதர படிகள், 15 நாள் விடுப்பு, 20 நாள் அரை ஊதிய விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஏற்கெனவே பெற்று வந்த 35 சதவீத இதரப் படிகள், ஊதிய திருத்தவிகிதம் (15 சதவீதம்) ஆகியவற்றை வழங்க வேண்டும். தொழிலாளர் பணி பாதுகாப்புக்கு எதிராக உள்ள ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டுமென தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.