சென்னையில் ஒரு வார கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்

சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நேற்று தொடங்கிய கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சியில் கரோனா பரவல் தடுப்பு உறுதிமொழியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மனீஷ், ஷரண்யா அரி, தயாநிதி மாறன் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். படம்: பு.க.பிரவீன்
சென்னை மாநகராட்சி சார்பில், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நேற்று தொடங்கிய கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சியில் கரோனா பரவல் தடுப்பு உறுதிமொழியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மனீஷ், ஷரண்யா அரி, தயாநிதி மாறன் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மக்கள் அதிகம்கூடும் 9 இடங்களில் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை கடைகளைத் திறக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு வார கரோனாவிழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா, திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, கரோனா விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனசேவையையும் தொடங்கிவைத்தார். இப்பிரச்சாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல் நாளான இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், கரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்றல், விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் போன்றவை நடைபெற்றன. 2-ம் தேதி (இன்று) கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. 3-ம் தேதி வணிகர்கள் மத்தியிலும், 4-ம் தேதி சுங்கச்சாவடிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கபசுர குடிநீரும் விநியோகிக்கப்பட உள்ளது.

5-ம் தேதி மாணவர்கள் பங்கேற்கும் சுவரொட்டி, வண்ணம் தீட்டுதல் போன்ற போட்டிகளும், 6-ம் தேதி விநாடிவினா போட்டியும் நடைபெற உள்ளது. 7-ம் தேதி கரோனா தடுப்பூசி போட உதவி செய்வதில் சிறப்பான பங்களிப்பை செய்த அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாக சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதனால் 9 பகுதிகளில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், மாநகராட்சி துணை ஆணையர்கள் மனீஷ், ஷரண்யா அரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in