

கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகியின் மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகிய இருவரும் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தாளாளர் வாசுகி தாம்பரம் நீதிமன்றத்தில் 26-ம் தேதி சரணடைந்தார்.
இதையடுத்து வாசுகியை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியபோது, அவரை பிப்ரவரி 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், சிபிசிஐடி எஸ்பி நாகஜோதியிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று முன்தினம் ஒப்படைத்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்கும் முகவராக செயல்பட்டவர்களின் விவரம் குறித்தும், பாதியில் நின்ற மாணவர்கள் பட்டியல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
இதைத் தொடர்ந்து கல்லூரி தாளாளர் வாசுகி, முதல்வர் கலாநிதி மற்றும் தாளாளர் மகன் ஸ்வாகத் வர்மா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (பிப்.1) மனுதாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.