

விழுப்புரம்: இந்தியாவில் 7 லட்சம் போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன் பேசியது: வழக்கறிஞர் தொழிலில் ஒரு காலத்தில் ஆண்களின் ஆதிக்கம் இருந்தது. பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இப்போது 70:30 என்ற அடிப்படையில் இருக்கிறது.
எதிர்காலத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் நிலை வரலாம். மாணவர் சேர்க்கையின்போது மெரிட்டில் பெண்கள் வருகின்றனர். வழக்கறிஞர் தொழிலையும் நன்றாக செய்கின்றனர். கீழமை நீதிமன்றங்களில் 60 சதவீதத்துக்கு மேல் நீதிபதிகளாக பெண்கள் உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் உள்ளனர். இது மகிழ்ச்சியான செய்தி.
வழக்கறிஞர் தொழில் மீது அதிகளவு புகார் உள்ளது. வழக்கறிஞரை யாரும் மதிப்பதில்லை. அந்த அளவுக்கு தொழில் சென்றுவிட்டது. இதற்கு காரணம், எங்கேங்கோ படித்துவிட்டு வழக்கறிஞராக வந்து விடுகின்றனர். இது இல்லாமல் போலி வழக்கறிஞர்களும் உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் 30 முதல் 40 சதவீதம் போலி வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று பார்கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 18 லட்சம் வழக்கறிஞர்களில் 6 லட்சம் முதல் 7 லட்சம் போலி வழக்கறிஞர்கள் உள்ளனர். மோசமடைந்துள்ள இத்தொழிலை காப்பாற்ற வேண்டும். இதற்கு நேர்மையாக, கடினமாக, கட்சிகாரர்களுக்கு உண்மையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.