

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,016 வரை உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.22,240 வரை விற்கப்பட்டது. திடீரென விலை உயர்ந்ததால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தது.
சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டின் கடைசி 3 மாதங்களில் தங்கம் விலை குறைந்து ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை படிப்படியாக உயர்ந்துகொண்டே வந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,600 விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவின் காரணமாக, முதலீட்டாளர்களின் கவனம் தங்க முதலீட்டில் திரும்பியது. இதனால், தங்கத்தின் தேவையும் அதிகரித்து, விலையும் திடீரென அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,653-க்கும், ஒரு பவுன் ரூ.21,224-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.127 என பவுனுக்கு ரூ.1,016 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.2,780-க்கும், ஒரு பவுன் ரூ.22,240-க்கும் விற்கப்பட்டது. மாலையில், தங்கம் விலை சற்று குறைந்து, ஒரு கிராம் ரூ.2,768-க்கும், ஒரு பவுன் ரூ.22,144-க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.115 என பவுனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது.
கடைகளில் கூட்டம் குறைந்தது
கடந்த 2014-ம் ஆண்டு மே 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.22,144-க்கு விற்கப்பட்டது. 21 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே விலையில் தங்கம் நேற்று விற்கப்பட்டது.
தங்கம் விலை திடீரென உயர்ந்ததால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று கணிசமாக குறைந்திருந்தது. சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, தாம்பரம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக் கடைகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் நேற்று குறைவாகவே இருந்தது.
இதுபற்றி சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறியபோது, ‘‘இந்திய பங்குச் சந்தையில் திடீரென பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை நாங்களே எதிர்பார்க்கவில்லை. பங்குச் சந்தைபோல, வங்கிகளின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளன. மேலும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கியிருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்’’ என்றார்.