Last Updated : 01 Aug, 2021 06:14 PM

 

Published : 01 Aug 2021 06:14 PM
Last Updated : 01 Aug 2021 06:14 PM

தொற்றுப் பரவல்: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம்

தமிழகத்தில் சேலம் உள்பட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நடத்தப்படும் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சேலம், சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில், கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்காட்டில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறைப் பூங்காக்கள், ஏற்காடு படகு குழாம் ஆகியவை மூடப்பட்டுள்ள போதிலும், ஏற்காட்டில் தற்போது நிலவும் இதமான தட்பவெப்பம், பள்ளி, கல்லூரி விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், விடுமுறை நாட்களில் ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

ஏற்காட்டில் பக்கோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் இன்று சுற்றுலாப் பயணிகளைக் கூட்டம் கூட்டமாகக் காண முடிந்தது. ஏற்காட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்காமல் தடுக்க, விழிப்புணர்வு மற்றும் தொற்று கண்டறியும் பரிசோதனை ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து ஏற்காடு மலையை வந்தடையும் இடம், ஏற்காடு ரவுண்டானா உள்பட முக்கிய இடங்களில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸார் ஆகியோர் இணைந்து, சுற்றுலாப் பயணிகளுக்குத் தொற்றுப் பரவலைத் தடுக்க, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸார் ரோந்து சென்று, ஒலிப்பெருக்கி மூலம் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக நிற்கும் இடங்களில், அவர்களைக் கலைந்து செல்லவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

கார்களில் 4-க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தால், அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை, முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால் அபராதம் என தொடர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்துச் சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘’ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை 100 முதல் 120 எண்ணிக்கை அளவுக்கு நடத்தப்பட்டு வந்தது. தற்போது, பரிசோதனை எண்ணிக்கை 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x