

கையைப் பிடித்து இழுத்தால் கூட, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர மறுக்கிறார்கள் என்று திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் வேதனை தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சொந்தங்களை இழந்துள்ளோம்
விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “கரோனா தொற்று பலரது வாழ்க்கையை பாதித்துள்ளது. வாழ்வாதாரத்தையும், சொந்தங்களையும் இழந்துள்ளோம். உலகமே தலைகீழாக மாறிவிட்டது. ஓராண்டாக, வீட்டிலேயே மாணவர்கள் முடங்கி கிடக்கின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் தொற்று வேகமாகப் பரவுகிறது. முகக்கவசம் அணிய வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 முகக்கவசம் அணியலாம். நான் கூட 2 முகக்கவசம் அணிந்துள்ளேன். பேசுவதற்குச் சிரமமாக இருக்கலாம். நானும் பாதிக்கப்பட்டுவிட்டால், உங்களுக்கு யார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது?. 6 அடிக்குத் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 10 முதல் 15 குழந்தைகள், தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர். இதனை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா தொற்றில் இருந்து, நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, இதைத்தவிர வேறு ஆயுதம் நம்மிடம் இல்லை. வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. ஆனால், கையைப் பிடித்து இழுத்தால் கூட, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர மறுக்கிறார்கள்.
செப்டம்பரில் 3-வது அலை வரும் என கூறப்படுகிறது. குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கும் என்கிறார்கள். எனவே, அடுத்த 15 நாட்களுக்குள், நமது மாவட்டத்தில் உள்ள அனைவரும் முதல்கட்டத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பகுதிக்கு பரிசு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.