

ஆடி கிருத்திகை மற்றும் ஆடி 18 தினங்களில் கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக் கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் வழிபாடு செய்வதற்காக மக்கள் அதிகளவில் கோயில்களுக்குச் செல்வார்கள். இதனால் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க, தமிழக அளவில் கோயில்கள் மூடப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி, கரூர் மாரியம்மன், வெண்ணெய்மலை, பாலமலை, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்கள், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், குளித்தலை கடம்பனேஸ்வரர், மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன் உள்ளிட்ட அனைத்து முக்கியக் கோயில்களிலும் ஆடி கிருத்திகை மற்றும் ஆடி 18-ஐ முன்னிட்டு நாளை (ஆக.2ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (ஆக. 3ம் தேதி) ஆகிய 2 நாட்களும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கோயில் அர்ச்சகர் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதிகளின்படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த இரு நாட்களில் பொது தரிசனத்தில் கலந்துகொள்ளப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. திருக்கடம்பந்துறையில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.