Published : 01 Aug 2021 11:10 AM
Last Updated : 01 Aug 2021 11:10 AM

வளர்ச்சித் திட்டங்களால் நச்சு வாயுக்கள் வெளியேற்றம் அதிகரிப்பா?- டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களால் நச்சு வாயுக்கள் வெளியேற்றம் அதிகரித்துள்ளதா என்று மக்களவையில் டி.ஆர்.பாலு கேட்டதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இந்திய மக்கள்தொகையில் உள்ள வறுமையில் வாடும் பல கோடி மக்கள் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு இந்திய நாடு மேற்கொண்டுவரும் தொழில் மேம்பாட்டுத் திட்ட இயக்கம் காரணமாக வெளியேறும் புகைகளால் சுற்றுச்சூழல் வேகவேகமாக மாசடைவதால், எத்துணை வனப் பாதுகாப்பு மற்றும் வனப் பெருக்கத்தை ஏற்படுத்தினாலும் பயன் அளிக்காது என்பது உண்மையா?

அப்படியானால், சுற்றுச்சூழல் மற்றும் வான்வெளியைப் பாழ்படுத்தும் கரிம மாசுவைத் தடுத்திட செலவு மிகுந்த தொழில்நுட்பங்களைப் பெற்றிட இந்திய அரசு தீட்டியுள்ள திட்டம் என்ன? புவியின் வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் மிகாமல் இருப்பதை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட பாரீஸ் திட்டத்தின் அம்சங்களை ஜி-20 நாடுகளில் ஒன்றான இந்தியா சரிவரச் செயல்படுத்துகிறது என்று அரசு கூறுவது எந்த அளவுக்குச் சரியானது? அப்படி என்றால் அவற்றின் விவரங்கள் என்ன என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (30.7.2021) விரிவான வினா எழுப்பினார்.

இதற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனங்கள் மற்றும் தட்ப வெப்பநிலை மாற்ற அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்த பதில் பின்வருமாறு:-

"பூமியின் வெப்பநிலை உயர்ந்து வரும் பிரச்சினை என்பது உலக நாடுகள் இணைந்து சமாளிக்க வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் அவையின் தட்ப வெப்பநிலை மாற்றம் தொடர்பான மரபு ஒப்பந்தம் மற்றும் பாரீஸ் உடன்பாடு ஆகிய சர்வதேச ஒப்பந்தங்களை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களின்படி இந்தியா ஆண்டுக்கு இருமுறை இந்தியா வெளியேற்றிடும் வாயுக்களின் அளவு மற்றும் விவரங்கள் குறித்து அறிக்கைகளை ஐ.நா.வின் தட்ப வெப்பநிலை செயலகத்துக்கு முறையாக அனுப்பி வருகிறது. இந்தப் பணியை இதற்கென நிறுவப்பட்டுள்ள இந்திய அரசின் தேசிய தகவல் அமைப்பு ஆண்டுக்கு இருமுறை செவ்வனே செய்து வருகிறது.

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சமுதாயப் பொருளாதார வளர்ச்சி சார்ந்த காரணிகளால் மாசுப்புகை வெளியேற்றம் அதிகளவில் இருக்கும் என்பதை ஐ.நா. அமைப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது. ஐ.நா.வின் தட்ப வெப்பநிலை மாற்றம் மரபு ஒப்பந்தச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மூன்றாவது அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டில் நிலவளப் பயன்பாடு, நிலப்பயன்பாடு மாறுதல்கள் மற்றும் வனம்சார் இயக்கங்கள் விளைவாக இந்திய நாட்டின் மொத்தப் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்ற அளவு 2531.07 மில்லியன் மெட்ரிக் டன் எடைக்கு நிகரான கரியமிலவாயு ஆகும்.

2014 - 2016க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் மட்டும் பசுமைஇல்ல வாயுக்கள் 225 மில்லியன் டன் அளவில் கூடுதலாக இந்தியா வெளியேற்றம் செய்துள்ளது. இது ஆண்டுக்கு 4.8 விழுக்காடு அதிகரித்து உள்ளது.

இருப்பினும், உலகளாவிய அளவில் பார்த்தால் இந்தியாவின் தனிநபர் பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றம் என்பது 1.92 டன் கரியமில வாயுவுக்கு நிகரானதாகவே உள்ளது. மேலும், 1850 முதல் 2017 வரை, உலகம் முழுவதும் இருந்து வெளியேறும் புகை அளவில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம் மட்டுமே.

ஆக, நச்சுவாயு வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்கு மிகவும் குறைவான அளவே என்பது மட்டும் அல்ல, "குளோபல் கார்பன் பட்ஜெட்" எனப்படும் "உலக கரிமநிலைக் கணக்கில்" இந்தியாவின் முறையான பங்கைவிட குறைவானதாகும். எனவே, புவிவெப்பம் மிகுவதற்கு, வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் முக்கியக் காரணமே தவிர, இந்தியா வெளிவிடும் புகைகள் அல்ல.

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் புகைவெளியேற்ற அடர்த்தியைக் கணக்கீடு செய்து பார்த்தால் 2005 ஆம் ஆண்டுக்கும் 2016 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 11 ஆண்டுகளில் 24 சதவீதம் குறைந்துள்ளது. இது, 2020க்கு முன்னர் நாமே தன்னிச்சையாக விதித்துக் கொண்ட இலக்கை, அதாவது 2005 தொடங்கி 2020க்குள் புகைவாயு வெளியேற்றம் 20 முதல் 25 சதவீதம் குறைக்கப்படும் என்ற இலக்கை, நிறைவேற்றிச் சாதனை படைத்துள்ளோம். இந்தச் சாதனை நமது தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

பாரீஸ் ஒப்பந்தத்தின்படி இந்திய அரசு தேசிய, உறுதி செய்யப்பட்ட பங்களிப்பையும் உருவாக்கி உள்ளது. இதன்படி பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, நிலை நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் தட்ப வெப்பநிலை ஏற்றத்தைத் தடுப்பதற்கும் உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் புகைவாயு வெளியேற்றத்தை 35 சதவீதம் குறைத்தல், 40 சதவீதம் அளவுக்கு கரிமம்சாரா மின் உற்பத்தி, 3 பில்லியன் டன்கள் நிகரான கரியமில வாயுவை அகற்றவல்ல புதிய வனப் பெருக்கம் ஆகிய மூன்று அம்சங்கள் இந்த தேசியப் பங்களிப்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

மேலும், தற்போது தேசியத் தட்ப வெப்பநிலை மாற்ற செயல்திட்டம் ஒன்றினையும் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் சூரிய மின்சாரம், மிகுதிப்படுத்தப்பட்ட ஆற்றல் திறன், நீர் வளம், வேளாண்மை, இமயமலை இயற்கை சூழல் வளம், உயிரினங்களின் வளம் குன்றா வாழ்விடங்கள், பசுமை இந்தியா, பருவநிலை மாற்றம்சார் அறிவியல் போன்ற எட்டு அம்சங்களை உள்ளடக்கியது.

இந்த தேசியச் செயல்திட்டம். 33 மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளின் செயல்திட்டங்களும் தேசியத் திட்டத்தின் அங்கமாக இணைந்துள்ளன. இவற்றைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்கிட தேசியப் பருவநிலை மாற்ற தகவேற்பு நிதியம் ஒன்றும்; மத்திய அரசின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாரீஸ் ஒப்பந்தம் உரிய முறையில் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க ஓர் உயர் நிலைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு செயல்பாடுகள் வாயிலாக இந்தியா பருவநிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்பநிலை உயர்வு சார்ந்த சவால்களை திறம்பட எதிர்கொண்டு உள்ளது என்பதை 2020ஆம் ஆண்டுக்கான தட்ப வெப்பநிலை வெளிப்படை அறிக்கை தெரிவித்துள்ளது. புவியின் வெப்பம் 2 டிகிரிக்கு மிகாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற ஜி-20 நாடுகளுக்கான இலக்கிற்கு ஏற்ப இந்தியா தனது தேசியச் செயல்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளது".

இவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதில் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x