முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
Updated on
1 min read

அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

போட்டித் தேர்வுகளில் தமிழக மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும், தமிழக மாணவர்களிடையே மத்திய, மாநில அரசுப் பணிகள் தொடர்பான போட்டித் தேர்வுகள், தகுதிகள், தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்துதுறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், அண்ணா மேலாண்மைபயிற்சி மையம், போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகளை உயர்த்த வேண்டும்.

பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

நிதி, மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் ச.கிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in