

நோயாளிகளுக்கு ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை பல நன்மைகளை வழங்குவதாக சென்னை அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுஃப் தெரிவித்தார்.
‘தி இந்து’ நாளிதழ் கடந்த 29-ம் தேதி நடத்திய சுகாதார நலம் பற்றிய இணைய வழி கருத்தரங்கில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுஃப் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
இதய அறுவை சிகிச்சையில் ரோபோட்டின் பயன்பாடு நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது. நோயாளி மட்டுமின்றி, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கும் இந்த சிகிச்சை முறை சிறந்த ஒன்று. ஆனால், இதுபற்றிய விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவில் உள்ளது.
திறந்த இதய அறுவை சிகிச்சையில் மார்பெலும்பு அறுக்கப்படுவதால், சிகிச்சைக்குப் பிறகு நோயாளி குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஓய்வெடுத்தால்தான் ரணம் குணமாகும். அறுவை சிகிச்சையின்போது ரத்தம் அதிகம் வீணாவதால், நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். மாறாக, ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை முறையில் ஊடுருவல் மிகக் குறைவான அளவில் இருப்பதுடன் சிகிச்சைக்குப் பிறகு இரண்டே வாரங்களில் நோயாளிகள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். சிறிய அளவிலான ஆழமான கீறல்கள் மட்டும் மேற்கொள்ளப்படுவதால், ரத்தம் அதிகம் வெளியேற சாத்தியம் இல்லை.
ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொள்வதன் பயிற்சிக் காலம் அதிகமானது என்பதால், உலகம் முழுவதிலும் மிக சில மையங்களில் மட்டுமே இது செய்யப்படுகிறது.
முதலில் ஒற்றை வால்வு நோய்க்கு சிகிச்சை அளித்து, இந்த சிகிச்சை முறையை கற்கத் தொடங்கினோம்; இப்போது இரட்டை, 3 நாள நோய்களை எல்லாம் எங்களால் குணப்படுத்த முடிகிறது.
சிகிச்சை நடக்கும்போது, ரோபோட்டை வழிநடத்தும் பொறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரை சார்ந்தது. திறந்த இதய அறுவை சிகிச்சையில் பின்பற்றப்படும் செய்முறையும், ரோபோடிக் அறுவை சிகிச்சையின் செய்முறையும் ஒன்றே. ஆனால் இந்த இரு சிகிச்சை முறைகளின் முடிவுகள் பெரிதும் மாறுபட்டுள்ளன.
இதுதொடர்பாக மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நோயாளிக்கு கிடைக்கும் பொருளாதார ரீதியான ஆதாயங்கள் அபரிமிதமானவை என்று தெரியவந்துள்ளது. நாங்களும் இத்தகைய ஆய்வை நடத்துவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்; அதன் முடிவுகள் ஓரிரு மாதங்களில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.