Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு வழங்கியதற்கு விஜயகாந்த், கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தமாணவர்கள் 71 சதவீதம் பேர் இருக்கிறார்கள். எனவே, மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது, நடப்பு கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம், பொருளாதாரத்தில் வலிவுற்றவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடஒதுக்கீடு மூலம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து படிப்பற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும், அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூக நீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையைக் கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன.

10% இடஒதுக்கீடு சமூக அநீதி

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மருத்துவப் படிப்புகளில் அகிலஇந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய வலுவான கோரிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அறிவித்திருக்கிறது. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முயற்சிக்கு எதிர்வினை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதி சிந்தனையின் அடிப்படைக் கோட்பாட்டையே சிதைப்பதுபோல இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார நிலை ஒருபோதும் அளவுகோலாக இருக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x