Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை

வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் தேவி பாலியம்மன், அகத்தீஸ்வரர், சவுமிய தாமோதரப் பெருமாள் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கோயில்களின் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேவி பாலியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,திருத்தேரை சீரமைக்கவும் அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி, சன்னதிகள் மாற்றி அமைக்கப்படும்.

சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் புராதன சின்னங்களை பாதுகாப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். நந்தவனம் சீரமைக்கப்படும். அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் அன்னதானக் கூடம், யாகசாலையை பராமரிக்கவும், தெப்பக்குளத்தை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தப்படும். திருப்பணி முடிந்த கோயில்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும்.

கோயில்களுக்கு சொந்தமான இடங்களுக்கு வாடகை வசூலிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வாழ்வாதாரம் இல்லாமல் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். வணிக ரீதியாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால், தமிழகத்துக்கு சொந்தமான பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்பதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் விரைவில் பிறப்பிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x