

ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டையொட்டி முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
சூரனை அழித்து தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை விரத நாள் கடைபிடிக்கப்படுகிறது.
முருகனுக்கு பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை முருகன் கோயில்களில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது, கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல், ஆடி ஞாயிறு, ஆடி பதினெட்டையொட்டியும் முருகன் மற்றும் அம்மன் கோயில்களின் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் சி.ஹரிப்ரியா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டையொட்டி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டம் வடபழநி ஆண்டவர் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சென்னை சூளை அங்காளபரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம் கோயில், தேவிபாலியம்மன் கோயில் மற்றும் இளங்காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேர்த்தி கடனாக தீமிதி திருவிழா, காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டும் தரிசனம் செய்வார்கள். தற்போது, கரோனா தொற்று பரவல் அச்சம் உள்ளதால் ஆகஸ்ட் 1-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.கோயில்களில் ஆகமவிதிகளின் படி கால பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.