Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக வேஷம் போடுகிறது: புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விமர்சனம்

புதுச்சேரி

ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாஜக கொண்டு வந்தது போன்று வேஷம் போடுகின்றனர் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் மற்றும் திமுக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இல்லாதிருந்தால், தேசியமருத்துவ ஒதுக்கீடுகளில் ஓபிசிக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி அமல்படுத்தி இருக்கமாட்டார். உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் கடந்த ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வந்த வழக்குகளில் மத்திய அரசு இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காமல் போவதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்து இறுதியில் தோல்வி அடைந்தது.

பாஜக பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு எதிரானது. ஏழை எளிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி உட்பட பின்தங்கிய பிரிவினருக்கு பாஜக எந்த உதவியும் செய்ததில்லை. செய்ய விரும்புவதும் இல்லை. அது அவர்களது கொள்கையும் இல்லை. அரசியலமைப்பில் காங்கிரஸ் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பின்னர் ஓபிசிக்கான எண்ணிக்கையை 27 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் இந்த இடஒதுக்கீடு எம்பிபிஎஸ் மற்றும்பிடிஎஸ் இடங்களுக்கு பொருந்த வில்லை.

கடந்த 2007-ம் ஆண்டில் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்டாய இடஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை உறுதிசெய்து அதை நடைமுறைப்படுத்தினர். பிரதமர் மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தாலும், ஏழு ஆண்டுகளாக அவர் அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததினால் இந்த ஏழுஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்காமல் போயின.

2020 ஜூலை 3 அன்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஓபிசி மாணவர்களுக்கான தேசிய ஒதுக்கீட்டில் அரசியலமைப்பு இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரினார்.

அதைத் தொடர்ந்து ஒரு மாண வர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அது 2020 ஜூலை 27 அன்று ‘மாணவர்களின் உரி மையை நீங்கள் மறுக்கக் கூடாது’ என்று கூறியது.

இதன் தொடர்ச்சியாக திமுக, காங்கிரஸ் எடுத்த முயற்சி வெற்றி பெற்று இன்றைக்கு சமூக நீதி காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் மீட்க பட்டிருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பாஜக ஏதோ தாங்கள் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதகமாக சட்டம் கொண்டு வந்தது போன்று வேஷம் போடுகின்றனர்.

இவர்களைப் பற்றி நாடே அறியும். இவர்கள் யாருக்காக கட்சி நடத்துகிறார்கள், இவர்களின் அடிப்படை குணம், கோட்பாடு மற்றும் நோக்கம் என்னவென்று. பாஜக ஆட்சியில் இருக்கின்ற வரையில் இந்த நாட்டில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, நலிவடைந்த மக்கள் நன்மை அடைய முடியாது.

90 சதவீத மக்களின் உரிமை களை பறித்து 10 சதவீத மக்களிடம் கொடுப்பது தான் இந்த ஆர்எஸ்எஸ், பாஜகவின் அடிப்படை கொள்கை என்பதைமக்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x