Published : 01 Aug 2021 06:32 AM
Last Updated : 01 Aug 2021 06:32 AM

செல்போனில் டிஎஸ்பிபோல ஆண்குரலில் பேசி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது: இன்ஸ்பெக்டராக நடித்த கணவரும் சிக்கினார்

செல்போனில் டிஎஸ்பிபோல ஆண்குரலில் பேசி, ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற பெண்ணையும், இன்ஸ்பெக்டராக நடித்து வசூல் செய்ய முயன்ற அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்தவர் சரவண பார்த்திபன்(51), ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி ஜனனி(25) என்பவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சரவண பார்த்திபனிடமிருந்து ரூ.7 லட்சத்தை ஜனனி வாங்கியதாகக் கூறப்படுகிறது. சரவண பார்த்திபனிடம் மேலும் பணம் பறிக்க திட்டமிட்ட ஜனனி, முகநூலில் ரம்யா என வேறொரு பெயரில் போலியாக ஐ.டியை உருவாக்கி, சரவண பார்த்திபனிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி சரவண பார்த்திபனை செல்போனில் தொடர்புகொண்ட ஜனனி, வாய்ஸ் சேஞ்சர் செயலியைப் பயன்படுத்தி ஆண் குரலில் பேசியுள்ளார். அப்போது, தன்னை தூத்துக்குடி டிஎஸ்பி என அறிமுகம் செய்துகொண்டு பேசிய அவர், ‘‘ரம்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் இறக்கும் முன்பு எழுதியிருந்த கடிதத்தில் உங்கள் (சரவண பார்த்திபன்) பெயரை குறிப்பிட்டுள்ளதால், அந்த வழக்கிலிருந்து காப்பாற்ற ரூ.10 லட்சம் தரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன சரவண பார்த்திபன் பணம் தர சம்மதித்ததால், ஜனனியின் கணவர் பார்த்திபன் (28) கடந்த 29-ம் தேதி கும்பகோணத்துக்குச் சென்று, தன்னை இன்ஸ்பெக்டர் என சரவணன பார்த்திபனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, பார்த்திபனிடம் ரூ.63,000-ஐ கொடுத்த சரவண பார்த்திபன், மீதித்தொகை தரும் வரை கும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பார்த்திபனை தங்க வைத்தார்.

பின்னர், தனது நண்பர்களான குடவாசல் குருசாமி(50), தஞ்சாவூர் நடராஜன்(52) ஆகியோருடன், பார்த்திபன் தங்கியிருந்த லாட்ஜூக்கு சரவண பார்த்திபன் சென்றார். அங்கு பார்த்திபனின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், அவரை தீவிரமாக விசாரித்தபோது, ஜனனி, பார்த்திபன் தம்பதியர் ஆள்மாறாட்டம் செய்து பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஜனனிக்கு போன் செய்த சரவண பார்த்திபன், தன்னை ஏமாற்றி வாங்கிய பணத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, பார்த்திபனை மீட்டுச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த ஜனனி, இதுகுறித்து தூத்துக்குடி போலீஸில் புகார் அளித்துவிட்டு, கும்பகோணத்துக்கு கடந்த 30-ம் தேதி வந்தார். பின்னர், தனது கணவரை மீட்டுத் தரக் கோரி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சரவண பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்களை போலீஸார் அழைத்து விசாரித்ததில், தம்பதியரின் மோசடி தெரியவந்தது. இதுகுறித்து சரவண பார்த்திபன் அளித்த புகாரின்பெயரில், ஜனனி, பார்த்திபன் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x