

திருநெல்வேலியில் வரலாற்று சின்னங்கள், தாமிரபரணி நீர்நிலைகள், ஆற்றிலுள்ள படித்துறைகள், அவற்றை ஒட்டியுள்ள கல்மண்டபங்கள் மற்றும் நீர்வாழ் பறவைகளை பாதுகாக்கும் விதமாக 18 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள்விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்து, பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது:
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் விதமாக இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் அந்தப்பகுதி இயற்கை ஆர்வலர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையொட்டி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி தற்போது நடத்தப்படுகிறது. இதுபோல் வாரந்தோறும் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை தடுப்பதற்காக தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தும் திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் கழிவுகளை கலப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
சைக்கிள் பேரணியில் பங்கேற்ற திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது:
பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக திருநெல்வேலி ஒரு காலத்தில் இருந்துள்ளது. இதனால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான புரதான சின்னங்கள் இங்குள்ளன. அவற்றைப்பற்றி வரும் சந்ததியினருக்கு தெரிவிக்கவும், அவற்றை பழமை மாறாமல் பாதுகாக்கவும் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வாரந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இயற்கை ஆர்வலர் ஹரி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.