Last Updated : 31 Jul, 2021 07:15 PM

 

Published : 31 Jul 2021 07:15 PM
Last Updated : 31 Jul 2021 07:15 PM

குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்த போலீஸார்: பட்டுக்கோட்டை காவல் நிலையத்தைக் கலகலப்பாக்கிய குடும்ப விழா

தஞ்சாவூர்

குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, சேர்த்து வைக்கப்பட்ட தம்பதியினர் மீண்டும் ஒற்றுமையாக வாழ்கிறார்களா எனத் தெரிந்துகொள்ள பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் குடும்ப விழா இன்று நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (31-ம் தேதி) தோரணங்கள், அலங்காரப் பூக்கள், பலூன்கள் கட்டி, காவல் நிலையத்துக்கு வந்தவர்களுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்று போலீஸார் சூழலைக் கலகலப்பாக்கினர்.

பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடும்பப் பிரச்சினை தொடர்பாகப் புகார் அளித்த பெண்களை வரவழைத்த போலீஸார், அவர்களுக்கும், அவர்களின் கணவருக்கும், கணவரின் குடும்பத்தாருக்கும் குடும்ப வாழ்க்கையை விளக்கி கவுன்சிலிங் வழங்கி அவர்களைத் தம்பதியினராக மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர்.

இப்படிச் சேர்த்து வைக்கப்பட்ட தம்பதியினர் மீண்டும் ஒற்றுமையாக வாழ்கிறார்களா எனத் தெரிந்துகொள்ள காவல் நிலையத்தில் குடும்ப விழா இன்று நடத்தப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம், பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட புகார் அளித்த தம்பதியினர், குழந்தைகளோடு வந்திருந்தனர்.

அவர்களைப் பெண் போலீஸார், ரோஜா, கல்கண்டு, சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். மேலும், தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜேஸ்வரி, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஏ.ஜெயா, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் "குடும்ப வாழ்வும், விட்டுக்கொடுத்து வாழ்தலும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

அதேபோல் குடும்ப விழாவில் கலந்துகொண்ட பெண்கள் பேசுகையில், ''கணவர் குடிக்கு அடிமையாகி தினமும் அடித்தது, நடத்தையில் சந்தேகப்பட்டது, கணவரது வீட்டினர் வரதட்சணை போன்றவற்றைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியது ஆகிய சம்பவங்கள் நடைபெற்றன. அதில் தலையிட்டு போலீஸார் கவுன்சிலிங் வழங்கிய பின்னர் அதுபோன்று எந்தச் சம்பவமும் தற்போது நடைபெறவில்லை. நாங்கள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறோம்'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி, குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாகப் புகார் கொடுத்து, தீர்த்து வைக்கப்பட்டவர்களை மீண்டும் வரவழைத்து, தற்போது எப்படி இருக்கிறார்கள் எனக் குடும்ப விழாவாக நடத்த அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி, 10 குடும்பங்களை வரவழைத்து அவர்களை ஊக்கப்படுத்தி, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினோம். மேலும், அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒருநாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்தோம். இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x