

கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையத்தின் முயற்சியால், தற்போது மாவட்டத்தில் செயற்கை உறுப்புகளுக்காகக் காத்திருப்போர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் எடை குறைந்த செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், 2020 ஆகஸ்ட் மாதம் நீரிழிவு நோயால் காலை இழந்த நோயாளிக்கு, முதல் செயற்கை கால் பொருத்தப்பட்டது. அதன்பிறகு, தற்போதுவரை 40 பேருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மருத்துவமனையின் முடநீக்கியல் துறை இயக்குநர் செ.வெற்றிவேல் செழியன் கூறியதாவது:
"முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முடநீக்கியல் துறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் ஈட்டிய பணத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மையம் இதுவாகும்.
இங்கு செயற்கை உறுப்புகள் அனைத்தும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை கால்களை இழந்த 38 பேர், கை இழந்த 2 பேர் என, இதுவரை மொத்தம் 40 பேருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், கை, கால் இரண்டையும் இழந்து உறுப்புகள் பொருத்தப்பட்ட இருவரும் அடங்குவர்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து, காத்திருப்போர் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுக்கும் செயற்கை, கை கால்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10 பேருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் செயற்கை உறுப்புகளுக்காகக் காத்திருப்போரே இல்லை என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையை எட்டிய முதல் மாவட்டமாக கோவை உள்ளது. கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில், கை, கால்களை இழந்தவர்களும் பயன்பெறும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
கரோனா காலத்திலும் தொடர்ந்து எடை குறைந்த கை, கால்களைப் பொருத்தி, இங்கு சிகிச்சை அளித்து வந்தோம். சிகிச்சை பெறுவோருக்கு நடைப்பயிற்சி, உளவியல் ஆலோசனை ஆகியவை அளிக்கப்படுகின்றன".
இவ்வாறு முடநீக்கியல் துறை இயக்குநர் வெற்றிவேல் தெரிவித்தார்.