Last Updated : 31 Jul, 2021 05:57 PM

 

Published : 31 Jul 2021 05:57 PM
Last Updated : 31 Jul 2021 05:57 PM

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் நீங்கியது; 3 துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு புறப்படுகின்றன

நாகர்கோவில்

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று மீன்பிடி தடைகாலம் நீங்கியதை தொடர்ந்து 3 மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 15ம் தேதி முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதி இரு மாதகால மீன்பிடி தடைகாலம் தொடங்கியது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிக்குட்பட்ட குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுக தங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதைப்போன்றே குமரி கடற்கரையை ஒட்டிய மேற்கு அரபி கடற்கரை பகுதியான கேரள துறைமுகங்களில் இருந்தும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

மீன்பிடி தடைகாலத்தை முன்னிட்டு குமரியில் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மற்றும் உபகரணைங்களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். நாட்டு படகுகள், பைபர் படகு, வள்ளங்களில் மட்டும் கரையோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

மீன்பிடி தடைகாலம் ஜூலை 31ம் தேதியோடு நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாகவே குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் உள்ள விசைப்படகுகளில் என்ஜின்களை பொருத்தி வர்ணம் தீட்டி மீனவர்கள் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

மேலும் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ்கட்டிகள் படகுகளில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வலை உட்பட மீன்பிடி உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

குமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் குளச்சல் உட்பட 3 மீன்பிடி துறைமுகங்களில் இருந்தும் மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு செல்கின்றன. நாளை ஞாயிற்குக்கிழமை என்பதால் முதல் நாளில் ஒவ்வொரு துறைமுகத்திலும் இருந்தும் குறைந்த அளவில் விசைப்படகுகள் செல்ல உள்ளன.

திங்கட்கிழமையில் இருந்து அதிக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதைப்போல் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவில் உள்ள துறைமுகங்களில் இருந்து மீன்பிடித்து வரும் விசைப்படகுகளும் ஆழ்கடலுக்கு செல்வதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கேரளாவிற்கு மீன்பிடி பணிக்கு புறப்பட்டு சென்றனர். மீன்பிடி தடைகாலம் நீங்கியதால் குமரி மேற்கு கடற்கரை பகுதி களைகட்ட தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x