Published : 31 Jul 2021 05:35 PM
Last Updated : 31 Jul 2021 05:35 PM

சிறப்பாகச் செயல்பட்டு அரசுக்கும் முதல்வருக்கும் நற்பெயர் உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

அமைச்சர் செந்தில் பாலாஜி: கோப்புப்படம்

சென்னை

அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்/ பகிர்மானம் எம்.செந்தில்வேல் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், அமைச்சர் அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கீழ்க்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த உத்தரவிட்டார்.

சென்ற ஜூன் மாதம் 19.06.2021 முதல் 28.06.2021 வரையில் தமிழகம் முழுவதும் மின் பராமரிப்புப் பணிகளான, மரக்கிளைகள் வெட்டுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை மாற்றுதல், பழுதடைந்த மின்பகிர்மானப் பெட்டிகளைச் சரி செய்வது போன்ற பணிகள் 10 நாட்கள் நடைபெற்றதன் அடிப்படையில், முதல் கட்டமாகக் குறைந்த மின்னழுத்தம் உள்ள மின்மாற்றிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, மேற்கண்ட குறைந்த மின்னழுத்த மின்மாற்றிகளைச் சரிசெய்வதற்கு ரூ.625 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதன் அடிப்படையில் 6,830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம், 5,705 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவி மின் பளுவைக் குறைப்பதற்கும் 3,200 கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி குறைந்த மின்னழுத்தத்தை ஏற்றம் செய்யவும், மூன்று முதல் நான்கு மாதங்களில் முடிக்க அறிவுறுத்தினார்.

சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் மேலே செல்லும் மின்கம்பிகளைப் புதைவடங்களாக மாற்ற ரூ.1,283.16 கோடியில் செயல்படுத்துதல், மின்னகத்தில் 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்கள் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண புகார் தொடர்பாகத் தனிக் கவனம் செலுத்திக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். முதல்வரின் உத்தரவின்படி வெளிப்படைத் தன்மையுடன் அனைத்துப் புகார்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் நுகர்வோரின் புகார்களைச் சரிசெய்யும் போதும், மின் இணைப்பு கொடுக்கும் போதும், மின்கம்பங்கள் தேவையான பொருட்கள் ஆகியவற்றை எடுத்துவர மின் நுகர்வோரின் செலவில் வாகன வாடகை மற்றும் பணியாளர்களுக்கான ஊதியத்தையோ வாங்கக் கூடாது. இதுகுறித்து புகார் எழுந்தால், விழிப்புப் பணிக் குழு பார்வையிட்டு, அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழகத்தின் மின் பகிர்மானத்தில் 9 மண்டலங்கள், 44 வட்டங்கள் உள்ளன. அவற்றின் கீழ் கோட்டங்கள், உபகோட்டங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள், வட்டங்களில் அமைந்துள்ள மின் இணைப்புகள் சரியாகப் பகிரப்படவில்லை. 2,811 பிரிவு அலுவலங்களில் குறைந்தபட்சமாக 678 மின் இணைப்புகளும் அதிகபட்சமாக 51,689 மின் இணைப்புகளும் உள்ளன. 744 உபகோட்டங்களில் குறைந்தபட்சமாக 4,619 மின் இணைப்புகளும் அதிகபட்சமாக 1,71,562 மின் இணைப்புகளும் உள்ளன.

176 கோட்டங்களில் குறைந்தபட்சமாக 66,002 மின் இணைப்புகளும்அதிகபட்சமாக 6,54,966 மின் இணைப்புகளும் உள்ளன. வட்டங்களில் குறைந்தபட்சமாக 3.9 லட்சம் மின் இணைப்புகளும் அதிகபட்சமாக 13.63 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன. மண்டலங்களில் குறைந்தபட்சமாக 25.6 லட்சம் மின் இணைப்புகளும் அதிகபட்சமாக 48.87 லட்சம் மின் இணைப்புகளும், உள்ளன. மாவட்ட ரீதீயாக 38 மாவட்டங்களில் 44 வட்டங்கள் உள்ளன. எனவே சில வட்டங்கள் 2 அல்லது 3 மாவட்டங்களில் அமைந்துள்ளன.

இந்த வேறுபாட்டைக் களைந்து ஒரு மண்டலம் மூன்று அல்லது நான்கு மாவட்டங்கள் உள்ளடக்கியதாகவும், மின் வட்டம் முழுவதும் ஒரே மாவட்டத்திற்குள் வருமாறும் ஒரு கோட்டம் என்பது ஏறத்தாழ 90,000 முதல் 1,00,000 மின் இணைப்புகளை உடையதாகவும் ஒரு பிரிவு என்பது மாநகராட்சிகளில் சுமார் 14,000 மின் இணைப்புகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சுமார் 10,000 மின் இணைப்புகள் ஊராட்சியில் பகுதிகளுக்குச் சுமார் 7,000 மின் இணைப்புகள் உடையதாகவும் அமைப்பது குறித்து அமைச்சர் இன்று ஆய்வு நடத்தினார்.

அரசுக்கும், முதல்வருக்கும் நற்பெயர் உருவாக்க வேண்டும், நம்முடைய செயல்பாடுகளில் கவனமாக இருந்து நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையத்தில் இன்று தற்போதுவரை 1,71,344 எண்ணிக்கையில் புகார்கள் வரப்பட்டுள்ளன. அதில் 1,59,186 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்பட்டது. இதில் 12,158 புகார்கள் நடவடிக்கைகளில் உள்ளன".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x