Published : 31 Jul 2021 05:11 PM
Last Updated : 31 Jul 2021 05:11 PM

டீசல் விலை உயர்வால் மீண்டும் பாரம்பரிய உழவு முறைக்கு மாறிய விவசாயிகள்: டிராக்டர்களுக்கு பதில் உழவு மாடுகள் பயன்பாடு அதிகரிப்பு

மதுரை

டீசல் விலை உயர்வால் சாகுபடி செலவுகளை குறைக்க விவசாயிகள் டிராக்டருக்கு பதில் உழவு மாடுகளைக் கொண்டு பாரம்பரிய உழவு முறையும், இயந்திர நடவுக்கு பதில் கூலி ஆட்களைக் கொண்டும் பாரம்பரிய நடவுப்பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூனில் முதல்போக பாசனத்திற்கு பெரியார் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும். பெரியார் பாசன கால்வாய் நீர் பாசனத்தை நம்பி முதல்போகத்தில் 45 ஆயிரம் ஏக்கரும், இரண்டாம் போகதில் 1 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறும்.

இந்த ஆண்டு பெரியாறு, வைகை அணைகள் நீர் வரத்து அதிகரித்தால் கடந்த ஜூன் மாதம் பெரியார் பாசனக் கால்வாயில் அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அழகர்கோயில், ஒத்தக்கடை உள்ளிட்ட பெரியார் பாசன கால்வாய் கிராமங்களில் விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி பணிகள் நடக்கின்றன. இதற்கிடையில் இரண்டாம் போகத்திற்கும் விவசாயிகள், விவசாய நிலத்தை உழவு அதற்கு தயார்ப்படுத்தி வருகின்றனர். கடந்த காலத்தில் உழவுப்பணிகளுக்கு பெரும்பாலும் விவசாயிகள், பாரம்பரிய முறைப்படி உழவுமாடுகளை பயன்படுத்தினர்.

கடந்த 15 ஆண்டுகளாகவே பெரும் விவசாயிகள் மட்டுமில்லாது சிறு, குறு விவசாயிகள் கூட விவசாயப்பணிகளும் டிராக்டர்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உச்சமாக இருப்பதால் டிராக்டர் வாடகை அதிகரித்துவிட்டது. டீசல் விலை உயர்வால் டிராக்டரை பயன்படுத்தினால் விவசாய சாகுபடி பணிக்கான செலவுகள் அதிகரிக்கும். அதனால், விவசாயப் பணிகளுக்கு விவசாயிகள் முழுக்க, முழுக்க பழைய பாரம்பரிய முறைப்படி உழவு மாடுகளைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

அதனால், உழவுப்பணிகளுக்கு டிராக்டர்களை வாடகைக்குவிட்டவர்கள், தற்போது வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கிராமப் புறங்களில் டிராக்டர்களை வங்கிக் கடன் பெற்றே பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல், இயந்திர நடவுகளுக்கு அதிக அளவில் டீசல் தேவைப்படுவதால் தற்போது உள்ள சூழ்நிலையில் இயந்திரங்களைக் கொண்டு விவசாய நடவுப்பணிகளையும் செய்ய முடியவில்லை. பழையமுறைப்படி விவசாய கூலித்தொழிலாளர்களை அழைத்து நடவுப்பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாய சாகுபடி செலவு அதிகரித்துவிட்டது. ஆனால், உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை.

உற்பத்திச் செலவை குறைக்க ஜிஎஸ்டி விலையைக் குறைக்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போன்று மானிய விலையில் விவசாயிகளுக்கு டீசல் வழங்க வேண்டும்.

12 வருடங்களுக்குப் பின்பு தற்போதுதான் குறித்த காலத்தில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் வருவதால் இந்த ஆண்டு இரண்டு போகம் விளைவதற்கு வாய்ப்பு உள்ளது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x