

கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்ட (சிஎஸ்ஆர்) நிதி மூலம் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று (ஜூலை 31) தொடங்கி வைத்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி கொடுத்தாலும் அதை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கி வருகிறோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிஎஸ்ஆர் நிதி மூலம் பொதுமக்களுக்கு இலவசத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தடுப்பூசி செலுத்துவதற்காகக் கோவையில் சிஎஸ்ஆர் மூலம் இதுவரை ரூ.1.92 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்னும் அதிக சிஎஸ்ஆர் நிதியைப் பெற்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். கோவையில் கடந்த சிலநாட்களாக தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20, 30 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. தொற்றைக் குறைக்கத் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் சிலர் முகக்கவசம் அணிவதில்லை. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆய்வுப் பணிகளுக்காக அமைச்சர்கள் வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் கோவை வந்து ஆய்வு செய்துள்ளார். கோவைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என வலியுறுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்''.
இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.