Published : 31 Jul 2021 02:19 PM
Last Updated : 31 Jul 2021 02:19 PM

கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழை நேரில் வழங்கிய சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு: கோப்புப்படம்

சென்னை

கருணாநிதி படத்திறப்பு மற்றும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா அழைப்பிதழை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு நேரில் வழங்கினார்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு மற்றும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் மு.அப்பாவு இன்று (ஜூலை 31) டெல்லியில் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கி விழாவுக்கு அழைத்தார்.

அதன்பின், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, தென் மாநிலங்களுக்குத் தாய் வீடாக, சென்னையைத் தலைநகராகக் கொண்டு, மதராஸ் பிரெசிடன்ஸி என, கேரளா, தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசாவின் ஒருபகுதி அனைத்தும் இணைந்த ஒரு சட்டப்பேரவையாக, 1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி கனாட் கோமகனால் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி வைக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, தமிழக முதல்வர், நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, இந்தியக் குடியரசுத் தலைவரை அழைத்தார். அவரும் வர சம்மதித்துள்ளார்.

அந்த அடிப்படையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமும், 13 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்று, 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பேரவையில் பணியாற்றி, 5 முறை தமிழக முதல்வராகப் பணியாற்றி, சாமானிய ஏழை, எளிய மக்களுக்காக உழைத்த மறைந்த முதுபெரும் தலைவர் கருணாநிதியின் முழு திருவுருவப் படத்தையும் திறந்து வைப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல், தலைமையேற்று நடத்துவதற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒப்புக்கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: கோப்புப்படம்

தமிழகத்திலிருந்து கரோனாவை விரட்டியடித்த முதல்வர் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தமிழக சம்பிரதாயப்படி, யார் முதன்மை விருந்தாளியாக வந்து அந்த விழாவை நடத்தி வைக்கின்றாரோ, அவரை நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது மரபு. அதன் அடிப்படையில், அவரை நேரில் வந்து சம்பிரதாயப்படி அழைப்பிதழைக் கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் கலாச்சாரம், வரலாறு , வாழ்வாதாரம் ஆகியவை இந்தியா முழுமைக்கும் தேவை எனக் கருதி 'தி திராவிடியன் மாடல்' புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினேன்".

இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x