Published : 31 Jul 2021 12:02 PM
Last Updated : 31 Jul 2021 12:02 PM

இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்தவர்கள்; அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்தவர்கள் என்பதால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும், மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஒற்றை நீதிபதி, அவர்கள் அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு 2019ஆம் ஆண்டு ஆணையிட்டார்.

அதன்மீது, நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தான் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது; சூழல்களைக் கருத்தில் கொள்ளாத எந்திரத்தனமானது ஆகும்.

இந்தியாவுக்குள் கடவுச்சீட்டு, தங்கும் அனுமதி (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்து தங்கும் அனுமதி காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்குள் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் தான் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது. இந்த வரையறை இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பொருந்தாது.

இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டுவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980-களின் தொடக்கத்திலிருந்து 2009-ம் ஆண்டு வரை உக்கிரமாகப் போர் நடைபெற்றது.

அந்தக் காலகட்டத்தில் சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல்ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும்தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை.

கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில்தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் எந்த சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறாகும்.

சொந்த நாட்டில் போரோ, இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கொடுமைகளோ இழைக்கப்படும்போது, அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது இயல்பு. அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களைப் பாதுகாப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்கள் வந்த நாட்டிலேயே குடிமகன்களாக வசிக்க விரும்பினால், சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடியுரிமை வழங்குவதும் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதற்கு வகை செய்வதற்காகவே, 1951-ம் ஆண்டில் ஐநா அகதிகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில், இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதாலும், இந்தியாவில் அகதிகள் குறித்த தேசியக் கொள்கை இல்லாததாலும்தான் இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்தகைய நாடு அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்துக்கு ஏற்றதல்ல.

அதுமட்டுமின்றி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல.

எனவே, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதுதான் சரியானது ஆகும். ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி, சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x