

ஆம்பூர் பாலாற்றிலிருந்து இரவு நேரங்களில் பொக்லைன் கொண்டு ஆற்று மணல் அதிக அளவில் கடத்தப்படுவதால், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் சேதமடைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்தையொட்டியுள்ள பாலாற்றுப்பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு, வேலூர் வரை கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், ஆம்பூரையொட்டியுள்ள பாலாற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்தும் கும்பல், பொக்லைன் கொண்டு மணல் அள்ளி வருகின்றனர். இதனால், பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய்கள் சேதமடைந்து வருகின்றன. பாலாற்றுப் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், ஆம்பூர் பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், அதிக அளவில் மணல் அள்ளி கடத்தப்படுகிறது.
ஆம்பூர் அடுத்த சின்னகொம்மேஸ்வரம் பகுதியில் தனியார் தொழிற்சாலைக்கு பின்புறம் பாலாற்றில் அதிக அளவில் மணல் அள்ளப்படுகிறது. பொக்லைன் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இரவு 8 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை பொக்லைன் கொண்டு பாலாற்றில் மணல் அள்ளப்படுவதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுகிறது. பாலாற்றில் அதிக அளவு பள்ளம் தோண்டி மணல் அள்ளப்படுவதால், அங்குள்ள குடிநீர் குழாய் உடைந்து, அதிலிருந்து குடிநீர் வீணாகவும் வாய்ப்புள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, சோமலாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, "பாலாற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஆங்காங்கே பொக்லைன் மூலம் மணல் அள்ளி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் கடத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் சேதமடைந்துள்ன. ஆம்பூர் பாலாற்றில் மணல் அதிகமாக கடத்தப்படுவதால், பாலாறு தன் அடையாளத்தை இழந்து விட்டது. சமீபத்தில் பெய்த மழைநீர் ஆம்பூர் எல்லையை கூட தாண்டவில்லை.
எனவே, பாலாற்றை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், காவல் துறை, வருவாய் துறையினர் கூட்டாக இணைந்து, பாலாற்றை கண்காணித்து மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கைகயாக உள்ளது" என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரிடம் கேட்டபோது, "எஸ்.பி. தனிப்படை காவல் துறையினர் ஆம்பூர் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இருப்பினும், ஆம்பூர் வட்டாரத்தில் கண்காணிப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.