

ஆந்திர சிறையில் இருந்து 287 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 287 தமிழர்கள் உள்ளிட்ட 347 பேரையும் விடுதலை செய்து திருப்பதி சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை ஆவது மகிழ்ச்சியளிக்கிறது.
இரு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்கள் இப்போது விடுதலையாகியிருந்தாலும், அவர்கள் அனுபவித்தக் கொடுமைகளும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் ஈடுசெய்ய முடியாதவை. இந்த வழக்கில் தமிழக தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும், அவர்களை ஆந்திர காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
ஆந்திர அரசின் திட்டத்தை முறியடித்து 287 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஆந்திர அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் வகையில், அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக அரசு நிதியுதவி வழங்கவேண்டும். ஆந்திர அரசால் தொடரப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் மற்ற தமிழகத் தொழிலாளர்களை விடுதலை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு 20 தமிழகத் தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கொலையாளிகளை தண்டிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.