

தமிழகத்தில் கரோனா 3-வது அலைதொடங்கவில்லை. எனவே தொற்று அதிகரிப்பு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு, தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு7 ஆயிரத்தை நெருங்கிய தினசரிகரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்துக்குப்பின் படிப்படியாக குறைந்து500-க்கும் கீழ் வந்தது. அதேபோல் 100-ஐ நெருங்கியிருந்த உயிரிழப்புகளும் 4, 5 ஆக குறைந்தது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குஅமலில் இருந்துவந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கரோனா தொற்றின் 2-வது அலை பரவத்தொடங்கியது. முதல் அலையைவிட தொற்றின் வேகம் தீவிரமாக இருந்ததால், பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகபட்சமாக கடந்த மே மாதம் 21-ம் தேதி 36,184 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அன்றைய தினம்467 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 5,913 பேர் பாதிக்கப்பட்டதில் 109 பேர் இறந்தனர்.
இதற்கிடையே, கடுமையான முழு ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துதல் போன்றவற்றால் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறையத் தொடங்கியது. தினசரி கரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்குள் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கவும், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே சென்றுவரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 1,756 வரை குறைந்த தினசரி கரோனா பாதிப்பு நேற்று முன்தினம்திடீரென்று 1,859 ஆக அதிகரித்தது.குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
கரோனா 3-வது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் மற்றும்மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் திடீரென்று தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கரோனா 3-வது அலைக்கான தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்று 3-வது அலை இன்னும் தொடங்கவில்லை. 3-வதுஅலை வந்தாலும் அதற்கான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தமிழகத்தில் உள்ளன. ஆக்சிஜனும் போதிய அளவு இருக்கிறது.குழந்தைகளுக்கென சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது அலையின்போது ஏற்படுத்தப்பட்ட படுக்கைகள் அப்படியே இருக்கின்றன. அதனால், 3-வது அலை குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.
தற்போது ஊரடங்கில் பல்வேறுதளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முகக் கவசம் அணிதல்,தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை மக்கள் முழுமையாகக் கடைபிடிப்பதில்லை. இதுதான் கரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரிக்க முக்கிய காரணம்.
தமிழகத்தில் கரோனா தொற்று முதல் அலையின்போது ‘ஆல்ஃபா’ வகை வைரஸ் காணப்பட்டது. 2-வது அலையின்போது வைரஸ்,தன்னை வீரியமிக்கதாக உருமாற்றிக் கொண்டு பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு ‘டெல்டா’ என பெயரிடப்பட்டது. பின்னர், ‘டெல்டா பிளஸ்’ வைரஸாக உருமாறி பரவத் தொடங்கியது.
தற்போது கரோனா தொற்று அதிகரித்துள்ள பகுதிகளில் எந்த மாதிரியான வைரஸ் பரவியுள்ளது என்பதைக் கண்டறிய மரபணு பரிசோதனை செய்யப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.