ஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

பெத்தநாயக்கனூர் அரசுப்பள்ளியில் பயிலும் கோட்டூரை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்.
பெத்தநாயக்கனூர் அரசுப்பள்ளியில் பயிலும் கோட்டூரை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்.
Updated on
1 min read

ஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அரசு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருவது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், கோட்டூர், தென்சித்தூர், கெங்கம்பாளையம், மேட்டுக்காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 155 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதில் ‘ஸ்மார்ட் போன்’ வசதியில்லாத மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் கல்வி கற்பது தடைபட்டு விடக்கூடாது எனக் கருதிய அரசுப்பள்ளி தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பாடம் கற்பித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:

ஸ்மார்ட் போன் வசதியில்லாத ஏழை மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியவில்லை. அந்த மாணவர்களின் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக, பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி ஒத்துழைப்புடன், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோயில், திருமண மண்டபம், சமுதாயக் கூடம் என பொது இடங்களில் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் 8 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு பாதுகாப்பான முறையில் அமர வைத்து, மாலை 5 மணி முதல் 7 மணி வரை பாடம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக தமிழ் மற்றும் அறிவியல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அடுத்தகட்டமாக அனைத்து பாடங்களும் நடத்தப்படும்.

இவ்வாறு தமிழாசிரியர் பாலமுருகன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in