

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 போகம் நெல் பயிரிடும் விவசாயிகள் பலர் உள்ளனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் மையங்கள் குறைந்த அளவே இயங்குகின்றன. ஒரிரு போகத்துக்கு மட்டும் சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இயங்குகின்றன. நேரடி நெல் கொள்முதல் மையங்களை அதிகரிப்பதுடன் 3 போகத்துக்கும் தேவையான அளவு நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மரம் மாசிலாமணி கூறும்போது, இயற்கை வேளாண்மைக்கு தேவையான விதைகள் உயிர் உரங்களை கொடுக்க வேண்டும். சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இயற்கை வேளாண் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். காஞ்சி மாவட்டத்தில் விவசாய பொறியியல் துறையின் தலைமை அலுவலகத்தை அமைக்க வேண்டும். வனத்துறை மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மரக்கன்றுகளை அளிக்க வேண்டும். மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் வசதியும், காப்பீடும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் பாலாற்றில் வெண்குடி, வெங்கட்டாபுரம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளின் பாக்கித் தொகையை அளிக்க வேண்டும். நெல், விதை,உரம் ஆகியவற்றை மானிய விலையில் அளிக்க வேண்டும். நத்தப்பேட்டை ஏரியில் சாயப்பட்டரை, காஞ்சிபுரம் நகரின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடியான பிறகு ஏற்கெனவே கட்டிய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் சண்முகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.